Published : 03 Sep 2019 12:52 PM
Last Updated : 03 Sep 2019 12:52 PM

பிரதமர் மோடிக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்குகிறது

நியூயார்க்,

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத் அபியான்) திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் சேவையைப் பாராட்டும் விதமாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அவருக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது வழங்க உள்ளது.

இம்மாதம் இறுதியில் ஐ.நா.பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நியூயார்க் செல்ல உள்ளார். அப்போது இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் புளூம்பர்க் குளோபல் பிஸ்னஸ் ஃபாரும் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மற்றும் நிர்வாக தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், " நாடு முழுவதும் மக்களுக்குக் கழிப்பறைப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஸ்வச் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் இந்த இயக்கத்தால், நாட்டில் ஏறக்குறைய 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் 38 சதவீதம் மட்டுமே கழிப்பறை இருந்த நிலையில் தற்போது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டுக்குச் சேவை செய்வதன் மூலம் உலக அளவிலான இலக்குகளை அடைவதற்கு உதவியதை அங்கீகரிக்கும் விதத்தில் சிறப்பு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.

நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி பில் மற்றும் கேட்ஸ் அமைப்பு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கும் நிகழ்ச்சியை 4-வது ஆண்டாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்படுகிறது. 5 பிரிவுகளில் உலகத் தலைவர்களுக்கும், தனி மனிதர்களுக்கும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைந்தமைக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

வளர்ச்சி, மாற்றத்துக்கு வித்திட்டவர், பிரச்சாரம், கோல்கீப்பர் வாய்ஸ், குளோபல் கோல்கீப்பர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. உலக அளவில் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுபவர்களுக்காக கோல்கீப்பர் விருது வழங்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இந்த மாதம் 24-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. 193 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து 27-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நியூயார்க் பயணத்தின் போது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைதிப் பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ப்ளூம்பெர்க் குளோபல் பிஸ்னஸ் ஃபாரும் கூட்டத்திலும் வரும் 25-ம் தேதி சிறப்பு விருந்தினராகச் சென்று பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x