Published : 20 Aug 2019 12:47 PM
Last Updated : 20 Aug 2019 12:47 PM

காஷ்மீர் விவகாரம்; இந்தியாவுக்கு எதிராக கருத்து: பாகிஸ்தானில் 200 கணக்குகளை முடக்கியது ட்விட்டர் 

கராச்சி,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த 200 பேரின் கணக்குகளை முடக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வாரம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்த 200 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ள பாகிஸ்தான் அரசு, அதற்கான காரணத்தை விளக்கக் கோரி கேட்டுள்ளதாக அந்த நாட்டில் இருந்து வெளியாகும் டான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவையும், ரயில், பேருந்து போக்குவரத்தையும் ரத்து செய்தது.

இதனிடையே இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆதரவாக அந்நாட்டு மக்கள் பலர் ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும் குழுக்கள் ஆகியோர் காஷ்மீருக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்தனர். இதற்காக ##StopSuspendingPakistanis என்ற டேக் லைனையும் உருவாக்கி ட்ரண்டாக்கினர்.

ட்விட்டரில் இந்தியாவுக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்த 200 பேரின் கணக்குகளை முடக்கி ட்விட்டர் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆஷிப் கபூர் கூறுகையில், " பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக, ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்கியது குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் பிரதமரின் டிஜிட்டல் மீடியா பிரிவு மற்றும் பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை ஆகியவையும் ட்விட்டர் நிறுவனத்திடம் தங்கள் நாட்டு மக்களின் கணக்குகளை முடக்கியது தொடர்பாகப் புகார்களை அளித்துள்ளனர்.

இதுகுறித்து டிஜிட்டல் மீடியா பிரிவின் தலைவர் அர்சலன் காலித் கூறுகையில், "காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 200 பேரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளோம். மேலும், இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும் வகையில் நாங்கள் தேசியத் தகவல் தொழில்நுட்ப வாரியத்துடன் இணைந்து பேசி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x