Published : 09 Aug 2019 02:42 PM
Last Updated : 09 Aug 2019 02:42 PM

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்காதீர்: பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம்

காபூல்,

ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று பாகிஸ்தானுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது.

மேலும், சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ்(பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசினார்.

அப்போது, " ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். காபூலில்கூட அமைதி நிலவுகிறது. ஆனால், காஷ்மீரில் ரத்தக் களறியாக இருக்கிறது. என்ன மாதிரியான ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

துப்பாக்கி குண்டு சத்தமும், வெடிகுண்டுகள் வெடிக்கும் சூழலும் நிலவும் ஆப்கானிஸ்தானில்கூட அமைதி வந்துவிட்டது, ஜம்மு காஷ்மீரில் இன்னும் அமைதி வரவில்லை என்று மறைமுகமாக குறிப்பிட்டு ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு சமீபத்தில் ரத்து செய்துவிட்டதாக செய்தி கிடைத்தது. கூடுதலாகப் படைகளை அனுப்பி வைத்துள்ளதாகவும், அங்கு மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம். இதனால் முஸ்லிம் மக்கள் பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். இந்தியாவும், பாகிஸ்தானும் எடுக்கும் முடிவுகள் அந்தப் பகுதியில் வன்முறைக்கும், குழப்பத்துக்கும் இட்டுச்செல்லாத வகையில் தடுக்கப்பட வேண்டும். சட்டப்பூர்வமாக காஷ்மீர் மக்களுக்கு உரிமை வழங்கிட வேண்டும்.

சில கட்சிகள் ஆப்கானிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்துப் பேசுகிறார்கள். இது ஒருபோதும், அங்குள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவாது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் ஜம்மு காஷ்மீருக்குத் தொடர்பில்லாதது. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்தும் மேடையாக ஆப்கானிஸ்தானை மாற்றக்கூடாது''.

இவ்வாறு ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் ஜாஹித் நசருல்லா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், " ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமைதி முயற்சியை காஷ்மீர் விவகாரம் எந்தவிதத்திலும் பாதிக்காது. துரதிர்ஷ்டவசமாக காஷ்மீர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x