Last Updated : 25 Jul, 2015 10:43 AM

 

Published : 25 Jul 2015 10:43 AM
Last Updated : 25 Jul 2015 10:43 AM

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 11

கி.மு.356லிருந்து 323வரை அலெக்ஸாண்டர் பெற்ற வெற்றிகள் கொஞ்ச நஞ்சமல்ல. தோல்வியையே காணாத வெற்றிகள் அவை. கிரீஸில் தொடங்கி எகிப்தைத் தாண்டி இன்றைய துருக்கி, ஈரான் மற்றும் பாகிஸ்தான்வரை படர்ந்த நீண்ட வெற்றிகள் அவை. ஒருவிதத்தில் கிழக்கையும், மேற்கையும் அவர் தனது படையின் மூலம் இணைத்தார் என்றே கூறலாம்.

அலெக்ஸாண்டர் வாழ்ந்தது 32 வருடங்கள்தான். ஆனால் தன் வாழ்வின் பிற்பகுதியில் அவர் ஒரு கடவுளாகவே கருதப்பட்டார். அவரது வாழ்க்கையைப் பற்றி பல கதைகள் நிலவுகின்றன. மிகவும் தொன்மையான காலம் என்பதாலும், ஆவணப்படுத்தப்படாததாலும் உண்மை எது பொய் எது என்பதைப் பிரித்தறிய வரலாற்று ஆசிரியர்களே சிரமப்படுகின்றனர். அக்காலப் போர்களைப் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. அலெக்ஸாண்டரின் தனி வாழ்வு குறித்துதான் பல வேறுபாடுகள்.

தனது வெற்றிகளை அலெக்ஸாண்டர் கொண்டாடிய விதமே அலாதியானது. தான் வெற்றி கண்ட பல்வேறு நாடுகளில் டஜன் கணக்கில் நகரங்களை உருவாக்கி அவற்றுக்குத் தன் பெயரையே சூட்டிக் கொண்டார். பெரும்பாலும் அலெக்ஸாண்டரியா என்பதுதான் இந்த நகரங்களுக்கு சூட்டப்பட்ட பெயராக இருந்தது. என்றாலும் அதே பெயருடன் இன்றளவும் இருக்கும் பெரிய நகரம் எகிப்தில் உள்ளது. நைல் நதிக்கரையில் உள்ள இந்த நகரம் எகிப்தின் இரண்டாவது பெரிய நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிந்துப் பிரதேசத்திலிருந்து மகாசகாவதியைத் தாண்டி கேகய நாட்டை வசப்படுத்த வேண்டுமென்று அலெக்ஸாண்டர் திட்டமிட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை.

மகாசகாவதியின் மன்னருக்கு மாற்றான் ஒருவன் தனது நாட்டைத் தாண்டி இந்தியப் பகுதிகளை வசப்படுத்துவது பிடிக்கவில்லை. அலெக்ஸாண்டரை எதிர்க்கத் தீர்மானித்தார். தனது ராணுவ எண்ணிக்கை குறைந்ததாக இருந்ததால் கூலிப்படையினரையும் அமர்த்திக் கொண்டார் மகாசகாவதி மன்னர்.

அலெக்ஸாண்டர் தரப்பிலும் கூலிப்படையினர் இருந்தனர். அதாவது இந்திய மன்னர்களுக்கு எதிராகப் போரிட்டது கிரேக்கப்படை மட்டுமல்ல, இந்திய கூலிப்படையினரும்தான்.

மகாசகாவதி மன்னரின் எதிர்ப்பைக் கண்ட அலெக்ஸாண்டர் யோசித்து கொஞ்சம் வித்தியாசமான போர் தந்திரத்தைப் பயன்படுத்தினார். போரில் பிரம்மாண்டமான கல் எறியும் கருவிகளைப் பயன்படுத்தினார். தொலை தூரத்திலிருந்தே மகாசகாவதி கோட்டையின்மீது வீசப்பட்ட அந்தக் கற்கள் எதிரணியினரை நன்றாகவே தாக்கின. தொடர்ந்த உக்கிரமான போரில் அலெக்ஸாண்டரின் சேனை வெற்றி பெற்றது.

தன் படையிலிருந்த கூலிப்படையினரின் உதவியையும் சேர்த்துக் கொண்டுதான் அடுத்ததாக கேகய நாட்டினை வசப்படுத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் எண்ணி இருந்தார். ஆனால் அவர் ராணுவத்திலிருந்த கூலிப்படையினர் மனநிலை வேறாக இருந்தது. “நாங்கள் கிளம்புகிறோம். எங்கள் குடும்பத்தோடு இருக்க விரும்புகிறோம்’’ என்றனர் அவர்கள். தான் என்ன கூறியும் அவர்கள் பிடிவாதம் பிடிக்கவே “சரி, பாக்கி இருக்கும் கூலியைப் பெற்றுக் கொண்டு நீங்கள் கிளம்பி விடலாம்’’ என்றார். அவர்கள் அப்படிக் கிளம்பிச் செல்ல அடுத்த ஆணையை தனது படைத்தளபதிகளுக்கு இட்டார்.

“நம்மிடமிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும் கூலிப்படையினரை வளைத்துப் பிடியுங்கள். அவர்களில் ஒருவர்கூட உயிரோடு இருக்கக் கூடாது’’.

ஆணையும் நிறைவேற்றப்பட்டது. ஏழாயிரம் வீரர்கள் கிரேக்கப் படையினரால் வெட்டி சாய்க்கப்பட்டனர்.

பின்னர் அலெக்ஸாண்டர் சிந்து நதியைக் கடந்தார். வழியில் எதிர்ப்பட்ட சிறு சிறு நாடுகளைத் தன் வசம் ஆக்கிக் கொண்டார். ஜீலம் நகருக்கு மேற்கே இருந்த பல இந்தியப் பகுதிகளை (பெரிதாக யுத்தம் என்று எதுவும் இல்லாமலேயே) தன் பிடிக்குள் கொண்டு வந்தார் அலெக்ஸாண்டர். பல குறுநில மன்னர்கள் பயத்தின் காரணமாகவே அலெக்ஸாண்டருக்கு அடி பணிந்தார்கள்.

ஆனால் கேகய நாட்டு மன்னன் இப்படிப்பட்டவர் அல்ல. அவர் பெயர் பர்வதேஷ்வரன். இந்தப் பெயர் வாயில் நுழையாததால் கிரேக்கர்கள் அவரை வேறொரு பெயரில் அழைத்தனர். அந்தப் பெயர் போரஸ்.

கேகய மன்னருடன் போரிடுவதற்கு முன்னால் தன் படை வீரர்களுக்கு முழுமையாக இரண்டு மாத ஓய்வளித்தார் அலெக்ஸாண்டர். இந்த ஓய்வு தன் தரப்புக்கு மிகவும் சாதகமாக இருக்குமென்றும் தனது வீரர்கள் புத்துணர்வுடன் போரிடுவார்கள் என்றும் அலெக்ஸாண்டர் கருதினார்.

ஆனால் போரில் ஈடுபடாத இந்த இரண்டு மாதங்களில் கிரேக்க வீரர்கள் வேறு மாதிரி யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு வந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. அலெக்ஸாண்டரின் ஆக்கிரமிப்பு வெறி அடங்குவதாக இல்லை. இந்த நிலையில் தங்கள் குடும்பத்தினரை பார்க்காமலேயே செத்து விடுவோமோ என்ற எண்ணம் அவர்களை அச்சுறுத்தியது. கேகய நாட்டுப் படையில் வெற்றி கண்ட பிறகு மன்னரிடம் இதுபற்றிப் பேச வேண்டுமென்று நினைத்தார்கள்.

இந்த இரண்டு மாத இடைவெளி வேறொரு விபரீதத்தையும் அலெக்ஸாண்டர் தரப்புக்கு கொண்டு வந்திருந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x