Last Updated : 19 May, 2015 10:35 AM

 

Published : 19 May 2015 10:35 AM
Last Updated : 19 May 2015 10:35 AM

இந்தியா-தென்கொரியா இடையே 7 ஒப்பந்தங்கள்: உள்கட்டமைப்புக்கு ரூ.63,000 கோடி வழங்குகிறது தென்கொரியா

இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட 7 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும் தென்கொரியாவும் கையெழுத்திட்டுள்ளன. மேலும் ரூ.63 ஆயிரம் கோடி வழங்கவும் தென்கொரியா முன்வந்துள்ளது.

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் நிறைவாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தென்கொரியா சென்றார். தலைநகர் சியோல் விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபர் பார்க் கியூன் ஹையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னார் மோடியும் பார்க் கியூன் ஹையும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:

இந்த நூற்றாண்டில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மிகச்சிறப்பான வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கொரியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டத்துக்கு தென்கொரியாவை முக்கிய கூட்டாளியாக கருதுகிறோம்.

ஆசிய பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு இருநாடுகளும் இணைந்து பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை கூறும்போது, “இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேம்பாடு அடைந்து வருகிறது. மேலும் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருதரப்புக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் விவரம்:

இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது, ஒலி-ஒளி கூட்டு தயாரிப்பில் இணைந்து செயல் படுவது, மின்சக்தி வளர்ச்சி மற்றும் புதிய மின் தயாரிப்பில் இணைந்து செயலாற்றுவது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்கள் மட்டத்தில் கூட்டாக செயல்படுவது, இளைஞர்கள் நலனில் இரு நாட்டு விளையாட்டுத் துறையும் இணைந்து செயல்படுவது, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் கூட்டாக செயல்படுவது, கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தில் இணைந்து செயல்படுது ஆகிய 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ரூ.63 ஆயிரம் கோடி

உள்கட்டமைப்பு வசதிகள், ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம், ரயில்வே, மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களில் கூட்டாக செயல் படுவதற்காக ரூ.63 ஆயிரம் கோடியை வழங்க தென்கொரி யாவின் நிதி அமைச்சகமும், ஏற்றுமதி-இறக்குமதி வங்கியும் (எக்சிம்) முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளின் எக்சிம் வங்கிகளும் ஆலோசனை நடத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x