Last Updated : 17 May, 2015 12:47 PM

 

Published : 17 May 2015 12:47 PM
Last Updated : 17 May 2015 12:47 PM

கிடுகிடுத்த கியூபா - 1

மேற்கிந்திய தீவுகள் என்பது ஒரு நாடு - இப்படித்தான் தீவிர கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.

கியூபா, ஜமைக்கா, ஹைதி, டொமினிகன் குடியரசு, பியூர் போரிகோ, வாஜின் தீவுகள், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் போன்ற பல தீவுகளும் இணைந்ததுதான் மேற்கிந்தியத் தீவுகள். இப்படி ஒரு பொதுவான அரசியல் பெயர் இதற்குக் குறைந்த காலத்துக்குதான் இருந்தது. அதாவது பிரிட்டிஷ் காலனிகளாக இவை இருந்தபோது ஜனவரி 3, 1958 முதல் 1962 மே 31 வரை இப்படி அழைக்கப்பட்டது. இவையெல்லாம் கரிபியன் கடல் பகுதியில் உள்ளன. தோராயமாக தென் அமெரிக்காவுக்கு மேலாகவும், வட அமெரிக்காவுக்குக் கீழாகவும் உள்ள நடுப்பகுதி.

முதலில் கியூபாவைப் பார்ப்போம்.

கியூபா நாட்டு மக்களால் இன்னமும்கூட அந்த மாற்றத்தை முழுவதுமாக நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியை உற்றுப் பார்க்கிறார்கள். ஐம்பது வருடப் பகைமை முடிவுக்கு வந்திருக்கிறதா?!

அமெரிக்காவும், கியூபாவும் கடும் பகைவர்களாகவே இருந்து வந்தன. ஒரு டஜன் அமெரிக்க அதிபர்கள் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்தும் விரோதம் மாறவில்லை. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. சமீபத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான ஓர் அறிக்கை இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அது - ‘‘தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து கியூபாவின் பெயர் நீக்கப்படும்’’.

அமெரிக்காவில் இப்படி ஓர் பட்டியல் உண்டு. அதில் ஈரான், சிரியா, சூடான் போன்ற நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளுடன் தூதரக நல்லுறவை அமெரிக்கா வைத்துக் கொள்ளாது. மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவும் கியூபாவும் தங்களுடைய தூதரக உறவுகளை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘‘இது நியாயமான முடிவு. சொல்லப்போனால் இந்தப் பட்டியலில் எங்கள் நாடு இடம் பெற்றிருக்கவே கூடாது’’ என்று கூறியுள்ளார் கியூபாவின் அதிபரான ரவுல் காஸ்ட்ரோ.

பாரீஸில் சார்லி ஹெப்தோ பத்திரிகை அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள் பலரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை, ‘’அராஜகமான தாக்குதல்’’ என்று கியூபா வர்ணித்தது அந்நாட்டின் தீவிரவாதத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என்று கூறுகிறது வெள்ளை மாளிகை.

நெல்சன் மண்டேலா இறந்தபோது தென்னாப்ரிக்காவில் ஒருமுறை ஒபாமாவும், காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்டார்கள். மற்றபடி அமெரிக்க அதிபர்களும், கியூபா அதிபர்களும் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டதுகூட இல்லை.

அமெரிக்காவின எதிர்கட்சியான குடியரசுக் கட்சியினர் ஒபாமாவின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார்கள். கியூபாவுடன் நெருக்கம் கொண்டால் அது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்பது அவர்கள் வாதம்.

அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்).

அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவரை அழிக்க அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்ததாகக் கூறுவார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக்கூட ஒரு முயற்சி நடந்ததாகக் கூறுவார்கள். ஆனால் பலிக்கவில்லை.

ஏன் இந்தப் பகைமை என்பதற்கு சில முக்கிய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டியே ஆகவேண்டும்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x