Published : 17 May 2015 12:51 PM
Last Updated : 17 May 2015 12:51 PM

உலக மசாலா: மாட்டின் சிறுநீரிலிருந்து ஷாம்பூ

ஐஸ்லாந்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் மாடுகளின் சிறுநீரிலிருந்து ஷாம்பூ தயாரித்திருக்கிறார்கள். இந்த ஷாம்பூ இயற்கையானது. எந்தச் செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்படவில்லை என்கிறார்கள். மாட்டுச் சிறுநீர் ஷாம்பூவைத் தலையில் தேய்த்துக் குளித்தால், முடி மிகவும் பளபளப்பாகவும் சுத்தமாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள். பழங்கால ஐஸ்லாந்து பெண்கள் தங்களின் முடியை மாட்டின் சிறுநீரால் சுத்தம் செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

அதைப் படித்த பிறகுதான் இந்த யோசனையே வந்தது என்கிறார்கள். சிறுநீரில் இருக்கும் வைட்டமின்களும் தாதுக்களும் கூந்தலுக்கு நல்லது என்கிறார்கள். ‘Q ஷாம்பூ’ என்று பெயரிடப்பட்டு விற்பனைக்கும் வந்துவிட்டது இவர்களின் ஷாம்பூ. சிறுநீரில் தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் இயற்கை வாசனைப் பொருட்கள் கலக்கப்பட்டாலும் சிறுநீர் நாற்றத்தைக் குறைக்க முடியவில்லை. அமோனியா நாற்றம் வருகிறது, குமட்டலாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் இயற்கையான ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், இதை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள் என்கிறார்கள் இந்த மாணவர்கள்.

பல்வேறு இடங்களில் இருந்து ஷாம்பூவுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. விரைவில் சர்வதேசச் சந்தையிலும் எங்கள் ஷாம்பூ இடம்பெறும், உலகம் முழுவதும் பரவும் என்கிறார்கள்.

பழங்காலம், இயற்கை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் எதையும் வித்துடலாம் போல…

மெல்போர்னைச் சேர்ந்தவர் 37 வயது கிறிஸ்டி மஸின்ஸ். செவிலியர் வேலையை உதறிவிட்டு, ‘சாரி இட்’ஸ் ஓவர்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். காதலர்கள் பிரிந்து செல்வது மிகவும் துயரமான செயல். இத்தனை நாளும் ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிவிட்டு, சில காரணங்களால் உறவு முறிந்து போகும்போது அதை எதிர்கொள்வதோ, ’குட்பை’ சொல்வதோ எளிதான விஷயம் இல்லை. அவர்களுக்கு என்றே இந்த நிறுவனத்தைப் பிரத்யேகமாக நடத்தி வருகிறார் கிறிஸ்டி.

காதலன், காதலி யாரிடம் உறவு முறிவு பற்றிய செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமோ, அவர்களுக்கு இமெயில், கடிதம், தொலைபேசி வாயிலாக விஷயத்தைச் சொல்லி விடுகிறார் கிறிஸ்டி. சிலர் பிரிவைக்கூட அழகாக, நாசுக்காகச் சொல்லவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களின் மன வலியைப் பிரதிபலிக்கும் விதத்தில் துயரம் தோய்ந்த வார்த்தைகளால் உருவான வாழ்த்து (!) அட்டை, பூக்கள், டிஸ்யு டப்பா போன்றவற்றை ஒரு கூடையில் அழகாக அடுக்கி, நேரிடையாகச் சம்பந்தப்பட்டவரிடம் கொடுக்கும் பணியையும் செய்து தருகிறார் கிறிஸ்டி.

இன்னும் சிலர் நேரிடையாகச் சொல்ல விரும்பமாட்டார்கள். ’உங்கள் காதலி உறவை முறித்துக்கொள்ள விரும்புகிறார். இது உங்களுக்கு எவ்வளவு வலி தரும் என்பதை அறிவோம். ஆனால் வேறு வழியில்லை. உங்கள் இருவருக்கும் இதுவரை சேர்ந்திருந்த அழகான தருணங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பொக்கிஷங்கள். இனியும் நண்பர்களாக இருக்கலாம் நீங்கள் விரும்பினால்… இப்படிக்கு, உங்கள் காதலியின் சார்பாக சாரி இட்’ஸ் ஓவர்.காம் என்று மெயிலைத் தட்டி விடுகிறார். ஒவ்வொரு விதமான சேவைக்கும் அதற்கேற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும். காதலர்களிடம் கிறிஸ்டியின் சேவைக்கு ஏராளமான வரவேற்பு இருக்கிறது.

தானே ஒரு தொழிலைக் கண்டுபிடித்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டாரே கிறிஸ்டி!

சீனாவின் சோங்க்விங் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறை, மாணவர்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் உடல் எடையைக் கணிசமாகக் குறைப்பவர்களுக்கு, அவர்கள் எடை குறைப்புக்கு ஏற்றவாறு பரிசுகள் வழங்கப்படும். அதிகபட்சம் எடை இழப்பவருக்கு டேப்லட் அல்லது குளிர்சாதனப் பெட்டி பரிசு. மற்றவர்களுக்குப் பணமாக பரிசு வழங்கப்பட இருக்கிறது.

எடை குறைக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரையும் எடையையும் பதிவு செய்துகொண்டு, பயிற்சியில் இறங்க வேண்டும். குறைந்த கட்டணத்துக்கு உடற்பயிற்சி வகுப்புகள், காலை உணவு மற்றும் ஒரு தம்ளர் பால் போன்றவற்றை வழங்குகிறது பல்கலைக்கழகம். ‘‘மாணவர்கள் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் உடற்பயிற்சியைப் பழக்கத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது’’ என்கிறார்கள் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள்.

நல்ல விஷயமா இருக்கே… இங்கே கூட அதைக் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x