Published : 14 May 2015 08:19 AM
Last Updated : 14 May 2015 08:19 AM

சீன அதிபரின் சொந்த ஊரில் தொடங்கும் மோடியின் பயணம்

வெளிநாட்டுத் தலைவர்கள் தேசத் தின் தலைநகரான டெல்லியில் வரவேற்கப்படும் நடைமுறையை முதல் முறையாக மாற்றி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனது சொந்த மாநில மான குஜராத்தில் வரவேற்றார் இந்தியப் பிரதமர் மோடி.

2014 செப்டம்பர் 17-ம் தேதி, பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாக உருவெடுக்கும் இரு நாடு களின் தலைவர்களும் நீண்ட நாள் பழகிய நண்பர்களைப் போல ஓர் ஊஞ்சலில் ஆடியதை உலக நாடுகள் வியந்து பார்த்தன.

மோடியின் சொந்த ஊரான அகமதா பாத்தில் ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் தொடங்கியதைப்போலவே, மோடியின் சீனப் பயணம், ஜி ஜின்பிங்கின் சொந்த ஊரான ஜியான் நகரில் தொடங்குகிறது. “3,000 ஆண்டு களுக்கும் மேல் பழமை வாய்ந்த ‘ஜியான்’ நகருக்கு வராதவர், சீனாவுக்கு வந்ததாக அர்த்தமாகாது” என்று சீனா வில் பொதுவாகக் கூறப்படுவது உண்டு. அதனால், பிரதமராக தனது சீன பயணத்தை தக்க இடத்தில் இருந்தே மோடி தொடங்குகிறார்.

குஜராத் முதல்வராக இருந்தபோது, சீனாவுக்கு அலுவல் ரீதியாக பலமுறை மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். மோடியின் இந்த பயணங்கள், குஜராத்தில் பல சீன நிறுவனங்கள் தோன்ற வழிவகுத்தன. “இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெறவே நான் ஹிந்தி மொழியை கற்று வருகிறேன்” என்று யுனான் மின்ஸு பல்கலைக்கழக மாணவி லீ மெய்ச்சின் கூறுவது சீன மாணவர்களின் இந்தியப் பார்வையை வெளிப்படுத்துகிறது.

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பது தொடர்பான முக்கியப் பேச்சு வார்த்தை மோடியின் இப்பயணத்தில் கட்டாயம் இடம்பிடிக்கும்.

ஜி ஜின்பிங்குக்கு அகமதாபாத்தில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு சீன ஊடகம் மற்றும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. காந்தி ஆசிரமத் தின் பசுமை ஜி ஜின்பிங்கின் கண் களுக்கு குளுமையை ஏற்படுத்திய தைப் போல, ஜியான் நகரின் அழகை மோடிக்கு, ஜி ஜின்பிங் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் வருகையின்போது மோடியின் அன்பளிப்பு உடையை ஜி ஜின் பிங் அணிந்ததுபோல, ஜியான் நகரில் மோடிக்கு ஏதாவது சிறப்பு ஆடைகள் தயாராக இருக்கவும் வாய்ப்புள்ளது.

காந்தி ஆசிரமத்தில் ஜி ஜின்பிங் குக்கு ராட்டை நினைவுப் பரிசாக வழங் கப்பட்டது. அதுபோல, டெரகோட்டா ராணுவ வீர்ர்கள் மற்றும் குதிரைகள் கொண்ட நினைவுப் பொருட்கள் மோடிக்கு அளிக்கப்படலாம்.

மோடியின் சீன பயணத்தின் முக்கியத்துவமே, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப் படுத்துவதுதான். சீனாவைத் தவிர, சர்வதேச அளவில் முக்கிய பொருளா தார மையமாகத் திகழும் ஷாங்காய் நகரில் தனது 3-ம் நாள் சுற்றுப் பயணத்தை மோடி மேற்கொள்கிறார்.

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாள ரான சுன் ஸுவின் “தி ஆர்ட் ஆப் வார்” நூலில், “போரைத் தவிர்ப்பதே நாட்டின் அரசனுக்கு அழகு; எதிரியின் தடையை சண்டையில்லாமல் தவிர்ப் பவனே சிறந்த தலைவன்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த உத்தியை மோடி பின்பற்றக் கூடும்.

மோடியின் ‘அனைவருக்குமான வளர்ச்சிக்கு அனைவரும் இணை வோம்’ வாசகம் இந்தியாவுக்கானது என்றாலும், மோடியின் அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களைப் பார்க் கும்போது அது சர்வதேசத்துக்கானது எனத் தோன்றுகிறது. மோடியின் இப் பயணம், நிச்சயமாக இரு நாடுகளின் உறவிலும், வரலாற்றிலும் மைல் கல்லாக இருக்கும்.

மோடியும் வெய்போவும்

சீன ட்விட்டரான சைன வெய்போவில் கணக்கு தொடங்கியுள்ள மோடி, கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். இதனால் சீன மக்கள் குறிப்பாக வெய்போ பயன்பாட்டாளர்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. பலரும் மோடியை வரவேற்று பதிவிட்டுள்ளனர். இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும், எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதும் பெரும்பாலான வெய்போ பதிவர்களின் கருத்தாக உள்ளது.

‘தி இந்து’வுக்காக பெய்ஜிங்கிலிருந்து சீன வானொலி தமிழ்ப் பிரிவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x