Published : 15 May 2015 11:18 AM
Last Updated : 15 May 2015 11:18 AM

உலக மசாலா: சமாதி 4டி மரண அனுபவம்!

மனிதர்களுக்கு இறப்பு பற்றி சிந்தனை வந்துகொண்டே இருக்கும். இறந்து போனால் எப்படி இருக்கும் என்றெல்லாம் சிலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆர்வத்துக்கு ஏற்றார்போல `சமாதி 4டி மரண அனுபவம்’ என்ற பெயரில் சீனாவில் கேம் ஷோ நடைபெற்றுவருகிறது. பேய், பிசாசு முகமூடி அணிந்த உருவங்கள் அந்த அறைக்குள் நடமாடுகிறார்கள்.

வெட்டப்பட்ட கை, கால்களைப் போன்று ஆங்காங்கே பிளாஸ்டிக் உறுப்புகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. மரணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற போட்டி இங்கே நடத்தப்படுகிறது. தோற்றவர்கள் போலி மரணத்தை அனுபவிக்க வேண்டும். சவப்பெட்டிக்குள் படுத்தவுடன் மூடிவிடுவார்கள். வெப்பக் காற்றை பெட்டிக்குள் அனுப்புவார் கள். நெருப்பு எரிவது போல விளக்கு வெளிச்சம் பெட்டிக்குள் பாயும்.

4டி மூலம் சில காட்சிகள் கண்களுக்குத் தெரியும். பிறகு ஒரு மாத்திரை வடிவிலிருந்து மறுபிறப்பு உருவாகும். நல்லவேளை மீண்டும் பிறந்துவிட்டோம் என்று பெட்டிக்குள் படுத்திருந்தவருக்குச் சந்தோஷம் உண்டாகும். பிறகு பெட்டியைத் திறந்து வெளியே அனுப்புவார்கள். பலர் இந்த அனுபவத்தை மிகவும் ரசிக்கிறார்கள். சிலர் பயத்தில் வெளியேறுகிறார்கள். கேம் ஷோ ஆரம்பித்து 3 மாதங்களில் 43 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட்கள் விற்பனையாகியிருக்கின்றன.

அடடா… மனிதனின் ஆர்வத்துக்கு ஓர் அளவே இல்லை…

மெக்ஸிகோவைச் சேர்ந்த அரசியல்வாதி ரெனாடோ ட்ரோன்கோ கோமெஸ். அவருக்குப் பணிச் சுமை அதிகமாக இருப்பதால், அதைக் குறைப்பதற்குப் புது யோசனையை அமல்படுத்த இருக்கிறார். அதாவது தன்னைப் போலவே இருக்கும் ஒரு நபரைத் தேடுகிறார். அதற்காக இணையதளத்தில் ஒரு போட்டி வைத்திருக்கிறார்.

அதில் வெற்றி பெறுபவருக்கு 1.8 லட்சம் பரிசுத் தொகையுடன், அவரிடம் உதவியாளர் வேலையும் கிடைக்கும். இதுவரை 4 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்குச் செல்வது, வீட்டைக் கவனித்துக்கொள்வது போன்ற முக்கியமான வேலைகளை எல்லாம் கோமெஸ் பார்த்துக்கொள்வார்.

சிறிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கூட்டங்களில் பேசுவது, மனுக்களை வாங்குவது போன்ற வேலைகளுக்கு இவரைப் போலவே இருக்கும் உதவியாளர் செய்வார். இந்தத் திட்டத்தின் மூலம் நிறைய நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை என்னுடைய தொகுதியை முன்னேற்றுவதற்குப் பயன்படுத்திக்கொள்வேன் என்கிறார் கோமெஸ்.

அட! நம்ம ஊர் சினிமாவில் வர்ற மாதிரி இல்ல இருக்கு…

அமெரிக்காவைச்சேர்ந்த மாணவர் பார்க்ளே அவுடெர்ஸ்லய்ஸ். ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தாக்கத்தில் 100 நாட்கள் ஓடும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். கலிஃபோர்னியாவின் சாண்டா மோனிகா துறைமுகத்தில் ஆரம்பித்த ஓட்டம், நூறாவது நாளில் மார்ஷல் பாயிண்ட் கலங்கரை விளக்கத்தில் முடிவுற இருக்கிறது. 100 நாட்களில் சுமார் 3,200 மைல் தூரத்தைக் கடக்க இருக்கிறார் பார்க்ளே. ஒரு நாளைக்கு 32 மைல்கள் ஓடுகிறார். “ஃபாரஸ்ட் கம்ப் எனக்கு மிகவும் பிடித்த படம்.

தைப் பார்த்துதான் ஓடும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இதுபோன்ற பயணம் எனக்குப் புதிதில்லை. விடுமுறையில் தென் கரோலினாவில் இருக்கும் பாட்டி வீட்டுக்குச் செல்ல நினைத்தோம். எப்படிப் போகப் போகிறோம் என்று அப்பாவிடம் கேட்டேன். அவர் விளையாட்டுக்கு உன்னுடைய பைக்கில் என்றார். எனக்கு அந்த யோசனை பிடித்துவிட்டது.

700 கி.மீ. தூரத்தையும் பைக்கில் கடந்தேன். எண்ணற்ற மனிதர்களைச் சந்தித்தேன். ஏராளமான அனுபவங்களைப் பெற்றேன். இந்த ஓட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு பயிற்சி எடுத்துக்கொண்டேன். காலை 15 மைல்கள் ஓடுவேன், மாலையில் 10 மைல்கள் ஓடுவேன். அந்தப் பயிற்சிதான் இப்பொழுது என் ஓட்டத்தை எளிதாக்கியிருக்கிறது’’ என்கிறார் பார்க்ளே. சும்மா ஓடாமல், நன்கொடையும் சேகரிக்கிறார். 10 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டி, தொண்டு அமைப்புகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது இவரின் லட்சியமாக இருக்கிறது.

உங்கள் பயணம் இனிதே நிறைவேறட்டும் பார்க்ளே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x