Last Updated : 16 Apr, 2015 11:11 AM

 

Published : 16 Apr 2015 11:11 AM
Last Updated : 16 Apr 2015 11:11 AM

சீறும் சீனா - 7

யுவான் இறந்த பிறகு சுமார் பத்து வருடங்களுக்கு குறிப்பாக எந்த அரசும் சீனாவில் ஆட்சி செய்யவில்லை. ஆட்சியில் அமர்ந்தவையெல்லாம் உள்ளூர் தாதாக்களின் தாற்காலிக அமைப்புகளாகவே இருந்தன. எனவே இந்த அரசுகளையெல்லாம் பிற உலக நாடுகள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அங்கீகரிக்கவும் இல்லை.

இதற்கிடையில் முதலாம் உலகப் போர் வெடித்தது. சீனாவின் ஆதரவு அப்போது நேச நாடுகளுக்குத் தேவைப்பட்டது. சீனாவின் நீண்ட கடற்கரையும், பெரிதான ராணுவமும் அவர்களுக்கு அவசியமாக இருந்தது.

சீனா ஆதரவு தர ஒப்புக் கொண்டது. அப்போது சீனாவிடமிருந்து ஜெர்மனி பிடுங்கிக் கொண்டிருந்த ஷாங்டாங் என்ற பகுதி போருக்குப் பிறகு சீனாவுக்கே அளிக்கப்படும் என்றன நேச நாடுகள்.

சீனாவைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து யுத்தம் செய்தனர்.

நேச நாடுகள் போரில் வென்றன. ஷாங்டாங் பகுதி ஜெர்மனியிடமிருந்து மாற்றப்பட்டது - சீனாவுக்கு அல்ல! மாறாக அந்தப் பகுதி ஜப்பானுக்கு அளிக்கப்பட்டது.

ஜப்பான் ரொம்ப பெரிய மனிதத்தனத்துடன் நடந்து கொள்வதுபோல் பாவனை செய்தது. ‘’ஷாங்டாங்கை நேச நாடுகள் சீனாவுக்கு அளித்தது போலவும், சீன அரசே அதை எங்களுக்கு அளித்ததுபோலவும் இருக்கட்டும்’’ என்றது. முட்டாள்தனமாக சீன அரசு இதற்கு ஒப்புக் கொண்டது.

இப்படியொரு வெட்கம்கெட்ட அரசா? சீன மாணவர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினார்கள். மே மாதம் 4-ம் தேதி அன்று மாணவப் பிரதிநிதிகள் பெய்ஜிங்கில் கூடினார்கள். மே 4 இயக்கம் என்றும், புதிய கலாசார இயக்கத்தின் தொடக்கம் என்றும் சரித்திரத்தில் அறியப்பட்டது இந்தக் கூட்டம்.

எதிர்ப்புகள் இருந்தாலும் ஷாங்டாங் ஜப்பானுக்குச் சென்றது.

இந்த நிலையில் ஜப்பானிலிருந்து மீண்டும் சீனாவுக்கு வந்திருந்தார் ஸன்யாட் சென். போட்டி அரசு ஒன்றுக்குத் தலைவர் ஆனார். சோவியத் யூனியனின் உதவியை நாடினார். சீனப் புரட்சி வீரர்களுக்கு உதவுவதற்கு சோவியத் ஒப்புக் கொண்டது. ஆனால் அப்போது சீனாவிலும் கம்யூனிஸ்ட் அரசு ஒன்று உருவாகவே, அதற்கும் ஆதரவு அளித்தது.

சில ஆண்டுகளில் ஸன்யாட் சென் புற்றுநோயால் இறந்தார். வலிமையாக விளங்கிய அவரது கட்சியின் அடுத்த தலைவராக வந்தவர் சியாங் கை ஷெக். இவர் தன் தலைமையின்கீழ் பாதி சீனாவை தங்கள் வசப்படுத்திக் கொண்டார். நான்ஜிங் என்ற நகரில் தனது அரசை ஏற்படுத்தினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஹுஹாங் நகரில் தங்கள் ஆட்சியை மையப்படுத்தினர். ஆக ஒரு கால கட்டத்தில் பெய்ஜிங், நான்ஜிங், ஹுஹாங் என்று மூன்று தலைநகரங்கள் சீனாவுக்கு இருந்தன.

ஒருகட்டத்தில் சியாங் ஒரு கடுமையான உத்தரவை வெளியிட்டார். தனது கட்சியை சீனக் கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுப் பிளவு படுத்துகிறார்கள் என்ற செய்தியால் உருவான உத்தரவு அது. ‘சீனக் கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்றுவிடுவோம்’ என்பதுதான் அந்த உத்தரவு.

சீனக் கம்யூனிஸ்ட்டுகள் தப்பி ஓடினார்கள். அவர்களில் ஓர் இளைஞரும் இருந்தார் மா சே துங்.

ஏழை விவசாயியின் மகனாக ஷாவோஷான் என்ற கிராமத்தில் பிறந்தவர் மா சே துங். அவர் அப்பாவுக்கு நிறைய கடன் தொல்லை. விவசாயத்தில் கிடைத்த பணம் போதவில்லை. இந்த ஒரே காரணத்திற்காக ராணுவத்தில் சேர்ந்தார் அவர். சம்பளத்தை சேமித்தார். கிராமத்துக்குத் திரும்பினார். விவசாயம் கலந்த வியாபாரத்தில் ஈடுபட்டார்!

அதாவது கிராம விவசாயிகளிடமிருந்து தானியங்களை வாங்கி நகர வியாபாரிகளுக்கு அதிகத் தொகைக்கு விற்ற வியாபாரம்.

உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டார் மா சே துங். காலையிலும், மாலையிலும் வயலில் வேலை செய்ய வேண்டும். தன் அப்பா அடிக்கடி தன்னை மட்டம்தட்டிப் பேசியதை சிறுவன் மா சே துங்கால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும் விருந்தினர்களுக்கு எதிரே தன்னை ஒரு நாள் அவமானப்படுத்தியதும், வீட்டை விட்டே ஓடத் தொடங்கினார். பின்னாலேயே அப்பாவும், அம்மாவும் வந்தனர்.

இனி உன்னை அடிக்க மாட்டேன் என்று அப்பா உறுதி கொடுத்த பிறகு வீட்டுக்கு வந்தார் மா சே துங். ‘’வளைந்து கொடுக்காமல் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை முதன் முதலில் எனக்கு உணர்த்திய சம்பவம் அது’’ என்று பின்னாளில் இதைப் பற்றி குறிப்பிட்டார் மா சே துங்.

நிறைய கதைகளை ஆர்வமாகக் கேட்ட மா சே துங் மனதில் ஒரு கேள்வி மட்டும் பலமாக எழுந்தது. இலக்கிய நாயகர்களில் ஒருவர்கூட ஏன் விவசாயியாக இல்லை?

அதன் பிறகு அவர் கவனம் அரசியலுக்குத் திரும்பியது. தன் தாய் நாடும் அடிமை நாடாக ஆகிவிடுமோ என்று கவலைப்பட்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் பெய்ஜிங் சென்றார். அங்கு தேசிய பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு வேலை கிடைத்தது. சின்ன வேலை. ஆனால் மா சே துங்கின் அறிவுத்தளம் அங்கு பெரிதும் விரிவடைந்தது. பகுதி நேரமாக கல்லூரியில் படிக்கத் தொடங்கினார். முக்கியப் பாடங்களாக அவர் தேர்ந்தெடுத்தது இதழியல் மற்றும் தத்துவம்.

ரஷ்யப் புரட்சி வெற்றியடைந்ததை அறிந்து கொண்ட பிறகு மா சே துங்கிற்கும் புரட்சி அரசியல் பற்றிய தாகம் எழுந்தது. ஆனால் அப்போதும் அவர் கம்யூனிஸ்ட் ஆகவில்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி சரியாக உருவாகாத காலம் அது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x