Last Updated : 28 Apr, 2015 10:36 AM

 

Published : 28 Apr 2015 10:36 AM
Last Updated : 28 Apr 2015 10:36 AM

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 4

ஒட்டாமன் சாம்ராஜ்யத்தை துருக்கியர் சாம்ராஜ்யம் என்றும் கூறுவார்கள். தொடக்கத்தில் 1299-ல் துருக்கியில் ஒரு சிறிய பகுதியாகத்தான் இது தொடங்கியது. பின்னர் பரந்து, விரிந்து பல பகுதிகளை தனக்குள் கொண்டு வந்தது. இந்த சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் சுன்னி இஸ்லாமியர்.

1500-களில் ஏமனின் ஒரு பகுதியையும் இந்த சாம்ராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் அடுத்த 100 வருடங்களில் அவர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக வெளியேற நேரிட்டது.

ஏடன் என்பது ஏமன் நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகரம். இதை செங்கடல் மூலம் அணுக முடியும். இந்த நகரம் 1839-ல் பிரிட்டிஷ் ஆட்சியின் வசமானது. 1869-ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டபோது அங்கு செல்லும் வழியில் இருந்த இந்த ஏடன் துறைமுகத்தில் கப்பல்களில் எரிபொருள்களை நிரப்பிக் கொள்வது வழக்கமானது.

1849-ல் ஒட்டாமன் மன்னர்கள் தற்போதைய ஏமனின் வடக்குப் பகுதியை மீண்டும் ஆக்ரமிக்க முயன்றார்கள். ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அதிக நாட்களுக்கு அவர்களால் தங்கள் ஆக்ரமிப்பை தாக்குப்பிடிக்க முடியவில்லை. காலப்போக்கில் (கிட்டத்தட்ட 1918-ல்) ஒட்டாமன் சாம்ராஜ்யம் நீர்த்துவிட்டது. இதைத் தொடர்ந்து வடக்கு ஏமன் சுதந்திரம் பெற்றது. (அப்போது ஏமன் தனிநாடு அல்ல. வடக்கு ஏமன் பகுதிதான் தனிநாடாக ஆனது).

சுதந்திரம் பெற்றவுடன் வடக்கு ஏமன் பகுதி இமாம் யாஹியா என்பவரின் ஆளுகையில் வந்தது. இவர் (ஏமனின் தற்போதைய தலைநகரான ஸனாவில் பிறந்தவர்) ஏமனையும் இன்றைய சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியையும் 900 வருடங்களுக்குமேல் ஆண்ட அல் காசிம்ஸி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்.

1948-ல் இவர் படுகொலை செய்யப் பட்டார். கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே அவர் மகன் அஹமது ஆட்சி அமைத்தார்.

1962-ல் அஹமது இறந்தவுடன் அவரது மகன் தலைமைப் பதவியை ஏற்றார். ஆனால் அதிக நாட்கள் இந்த அரசு நீடிக்கவில்லை. ராணுவ அதிகாரிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். ஏமன் அரபுக் குடியரசு என்று தங்கள் தேசத்துக்குப் பெயரிட்டார்கள். இதன் காரணமாக உள்ளூரில் தொடர்ந்து கலவரங்கள் வெடித்தன. அரச வம்சத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், குடியரசாக அறிவித்தவர்களுக்கு ஆதரவாக எகிப்தும் துணை நின்றன.

1967-ல் ஏமன் மக்கள் குடியரசு என்ற பெயரில் இந்த தேசம் தன்னை வடிவமைத்துக் கொண்டது. (என்றாலும் ஏமன் அரபுக் குடியரசாகவே அது பிறரால் அறியப்பட்டது). பிரிட்டன் வசமிருந்த ஏடனும் இதன் எல்லைக்குள் வந்தது. சவுதி அரேபியா தன் கண்காணிப்பில் வைத்திருந்த சில பகுதிகளும் ஏமன் வசம் வந்தன.

1969-ல் கம்யூனிஸ்டுகள் ஏமனின் தெற்குப் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். இதைத் தொடர்ந்து ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு என்று அதன் பெயரை மாற்றினார்கள். இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரம், வெளியுறவு ஆகியவையெல்லாம் சோவியத் யூனியனுக்கு ஆதரவாகவே அமைந்தன. மத்திய கிழக்கில் அமைந்த ஒரே கம்யூனிஸ நாடு என்பதால் சோவியத்தும் நிதி உதவியை அதிகமாகவே இந்த நாட்டுக்கு அளித்தது. பெரும்பாலும் மதச்சார்பற்ற நாடாகவே இது விளங்கியது.

இந்த இடத்தில் ஒரு முக்கியத் தகவலை மனதில் கொள்ள வேண்டும். ஏமன் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து, பிறகு இரண்டாகப் பிரிந்து மீண்டும் சேரவில்லை. ஒட்டாமன் சாம்ராஜ்யம் நீர்த்தபிறகு வடக்கு ஏமன் (ஏமன் அரபுக் குடியரசு) தனி நாடானது. தெற்கு ஏமன் அப்போது ஒரு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. இங்கிருந்த இரு முக்கியக் கட்சிகளும் சேர்ந்து எதிர்த்ததால் பிரிட்டன் தெற்கு ஏமனுக்கு சுதந்திரம் அளித்தது.

1971-ல் ஏமன் அரபுக் குடியரசில் (அதாவது தற்போதைய வடக்கு ஏமன்) நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் இதில் ஒரு வியப்பூட்டும் நிகழ்வு. எந்த அரசியல் கட்சியும் இதில் பங்கெடுக்கவில்லை. காரணம் அரசியல் கட்சிகளுக்கு அந்த நாட்டில் தடை!

இதன் காரணமாக அத்தனை பேரும் சுயேச்சைகளாகவே போட்டியிட்டனர். தேர்தல் முடிவு வெளியானது. வென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பூர்வ குடியைச் சேர்ந்தவர்கள். அதே சமயம் நிறைய படித்தவர்கள்.

ராணுவத்துக்கு இது பிடிக்கவில்லை. படித்தவர்களின் கைக்கு அதிகாரம் சென்றால் தங்களின் சக்தி குறைக்கப்பட்டுவிடும் என்ற பயம். உடனே ராணுவப் புரட்சி ஒன்றை நடத்தினார்கள். 1974-ல் புதிய பாராளு மன்றத்தை இயங்க விடாமல் சஸ்பெண்ட் செய்தார்கள். இதைத் தொடர்ந்து உள்ளூர் கலவரங்கள் பெரிய அளவில் வெடித்தன. அரசை முழுவதுமாகக் கவிழ்க்க ராணுவம் முயற்சித்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x