Published : 25 Mar 2015 10:58 AM
Last Updated : 25 Mar 2015 10:58 AM

உலக மசாலா: 43 வருடங்களாய் ஆண் உடை அணிபவர்!

எகிப்தில் வசிக்கிறார் சிசா அபு டாவூ. 64 வயது சிசாதான் அவருடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். கடந்த 43 ஆண்டுகளாக ஆண் உடையை அணிந்து, வேலை செய்து வருகிறார். 21 வயதில் சிசா கர்ப்ப மாக இருந்தபோது, அவரது கணவர் இறந்துவிட்டார்.

வேறு வருமானம் இல்லாததால் குழந்தை பிறந்த பிறகு, வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் அவர் வசித்த பகுதியில் பெண்கள் வேலை செய்வதற்கு அனுமதி கிடையாது. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆண்களின் உடையை வாங்கி அணிந்துகொண்டார். தலையில் தலைப்பாகைக் கட்டிக்கொண்டார். கால்களில் கறுப்பு ஷூக்களை மாட்டிக்கொண்டார்.

கிடைக்கும் வேலைகளைச் செய்து, தன் மகளை வளர்த்து வந்தார். மகளுக்குத் திருமணம் ஆனது. பேரக் குழந்தைகளும் பிறந்தனர். கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று அவர் நினைத்தபோது, மருமகனுக்கு உடல் நலம் குன்றிவிட்டது. இப்பொழுது மகள், மருமகன், பேரக்குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். இப்படியே 43 ஆண்டுகளை ஆணாகக் காட்டிக் கொண்டு, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் சிசா.

சமீபத்தில் சிசாவைப் பற்றி மீடியாக்களில் செய்தி வர ஆரம்பித்தது. ‘யார் மூலமோ செய்தி பரவி, இன்று எனக்கு ‘ஐடியல் மதர்’ என்ற விருது கிடைத்திருக்கிறது. இனிமேல் இந்த வேலையும் செய்ய முடியாது. விருதா என் குடும்பத்துக்குச் சாப்பாடு போடப் போகிறது?’ என்று கேட்கிறார் சிசா.

புகழ்பெற்ற ‘உலக சினிமா’ இயக்குநர் மஜித் மஜிதி உருவாக்கிய ’பாரான்’ திரைப்படத்திலும், இரானில் பிழைப்புக்காக ஆண் வேடமிட்டுக் கொண்டு வந்து கட்டடப் பணியில் ஈடுபடும் பெண்ணின் கதை உணர்வுபூர்வமாக வர்ணிக்கப்பட்டிருக்கும். அதை அப்படியே நினைவூட்டுகிறது சிசா அபு டாவூ வாழ்க்கை.

சிசாவின் கேள்வியில் நியாயம் இருக்கிறது… என்ன செய்யப் போகிறார்கள்?

பிரிட்டனில் வசிக்கும் ஸ்காட் வோர்கனும் கெய்ட்லின் மில்லரும் 6 ஆண்டுகளாகச் சேர்ந்து வசிக்கிறார்கள். ஸ்கார்லெட் என்ற 3 வயது குழந்தையும் சியன்னா என்ற 20 மாதக் குழந்தையும் இவர்களுக்கு இருக்கிறார்கள். கெய்ட்லினுக்குத் தெரியாமல் ஸ்காட் ஒரு வீடியோவைத் தயார் செய்தார். அதில், ‘உன்னைப் போல் ஓர் அருமையான அம்மா யாரும் இல்லை. உனக்குக் குழந்தையாகப் பிறந்ததில் எங்களுக்குப் பெருமை. உனக்குச் சிறந்த ஜோடி அப்பாதான்.

ஒவ்வொரு விதத்திலும் அற்புதமான பெண் நீ. எங்களுக்கும் அப்பாவுக்கும் நீ ரொம்ப ஸ்பெஷல். 6 ஆண்டுகள் நம் வாழ்க்கையில் அற்புதமான தருணங்கள். நமக்காகவே வாழும் அப்பாவை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும். பளீஸ்… எங்களுக்காகச் செய்வாயா?’ இப்படி ஒவ்வொரு தாளிலும் எழுதி, குழந்தைகளிடம் கொடுத்து வீடியோ எடுத்தார் ஸ்காட். கெய்ட்லின் பிறந்தநாள் அன்று வீடியோவைப் போட்டுக் காட்டினார். நெகிழ்ச்சியடைந்த கெய்ட்லின், ‘ஸ்காட் மற்றும் குழந்தைகளுடனான இந்த அற்புதமான வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டதில்லை. ஸ்காட்டும் குழந்தைகளும் விரும்பும்போது உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான்’ என்கிறார்.

வித்தியாசமான குடும்பம்!

நியு யார்க்கில் இருக்கிறது ‘ப்ரிஸ்கூல் மாஸ்டர்மைண்ட்’. இங்கே பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறி, படிக்கலாம், பாடலாம், ஆடலாம், வரையலாம், விளையாடலாம். குழந்தைத்தனம் போகாத பெரியவர்கள், தங்கள் ஆசைகளை இந்தப் பள்ளியில் சேர்ந்து நிறைவேற்றிக்கொள்ளலாம். இதற்கான கட்டணமாக 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் மட்டுமே இயங்கும் இந்தப் பள்ளியில் தினசரி வகுப்புகள், வார இறுதி வகுப்புகள், ஒரு மாத வகுப்புகள் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. அவரவருக்கு ஏற்ற வசதியான வகுப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். குழந்தைகள் போலவே கண் கவர் உடைகள், குழு விளையாட்டு, சுவர்களில் கிறுக்கல்கள் என்று களைகட்டுகின்றன இந்த வகுப்புகள். கூச்சமின்றி, கட்டுப்பாடுகளின்றி குழந்தையாக மாறிவிடுவதால் மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்கிறார்கள் இந்தப் பெரிய குழந்தைகள்.

எங்கிருந்துதான் இப்படியெல்லாம் ஐடியா கிடைக்குதோ…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x