Last Updated : 03 Feb, 2015 10:37 AM

 

Published : 03 Feb 2015 10:37 AM
Last Updated : 03 Feb 2015 10:37 AM

உருக்குலையுமா உக்ரைன்?- 2

ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம் மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம்? அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்.

உலகின் போக்கை தீர்மானிக் கவல்ல ஒரு சூப்பர் பவரின் பகுதியாக இருப்பது நல்லது தானே. பிறகு எதற்காக உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து விடுபட விரும்பினார்கள்? இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் கலாச்சாரப் பின்னணி ரஷ்யப் பகுதியிலிருந்து மிக மிக வேறுபட்டிருந்தது.

தொன்று தொட்டு உக்ரைனில் விவசாயம் கொழித்தது. பணக்கார விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் கொண்டிருந்த பகுதி அது. ரஷ்யாவைவிட தொன்மையான பகுதி தங்களுடையது என்பதிலும் அவர்களுக்கு நிறைய கர்வம்.

உக்ரைன் மக்கள் மனதில் சுதந்திர தாகம் நீறுபூத்த நெருப் பாகவே இருந்ததை உணர்ந்த ஸ்டாலினுக்கு ஒரு பெரும் கவலை உண்டானது. எப்படியாவது சோவியத்திலிருந்து உக்ரைன் பிரிந்து விடுமோ? அப்படிப் பிரிந்தால் வேறு பல பகுதிகளும் பிரிந்துவிட வாய்ப்பு உண்டே!

கவலைப்பட்ட ஸ்டாலின் திட்டங்கள் தீட்டினார். உக்ரை னிலுள்ள விவசாயத் தொழிலை ரஷ்யா கபளீகரம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

சோவியத் யூனியனின் ஒவ்வொரு பகுதிக்கும் ‘இந்த கால கட்டத்துக்குள் இந்த அளவு விளைச்சல் அதிகரிக்கவேண்டும்’ என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உக்ரைனில் விவசாய விளைச்சல் அதிகம்தான். ஆனால் அந்தப் பகுதிக்கான இலக்கு மிகமிக அதிக அளவில் நிச்சயிக்கப்பட்டது. தவிர யாரும் விளைச்சலைப் பதுக்கி வைக்கக் கூடாது என்று காரணம் காட்டி சோவியத் ராணுவ வீரர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டார்கள்.

அவர்கள் உக்ரைனிலுள்ள பெரும் விவசாயிகளின் வீடுகளில் நுழைந்து தானியங்கள் பதுக்கப் பட்டிருக்கிறதா என்று சோதனை செய்வதுபோல அவர்கள் தொடர்பான பல விவரங்களை சேகரித்து சோவியத் அதிகாரிகளுக்கு அளித்தார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாக உக்ரைனிலுள்ள பணக்கார விவசாயிகள் மெல்ல மெல்ல சைபீரியாவுக்குக் கடத்தப்பட்டனர். (சோவியத்தின் ஒரு பகுதியான சைபிரியா கடுங்குளிர் பிரதேசம். தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை அங்கு அனுப்பும் பழக்கத்தை சோவியத் யூனியன் வழக்கமாகவே கொண்டிருந்தது - அந்தமானுக்கு அனுப்பப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுக்கு வருகிறார்களா?).

உக்ரைன் எல்லைப் பகுதிகள் ராணுவத்தினால் சூழப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள விளை நிலங்கள் விளைச்சல் இல்லாமல் போயின. கடும் பஞ்சம் உக்ரைனில் நிலவத் தொடங்கியது. உக்ரைன் மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கத் தொடங்கினர். இந்த நிலையை ‘இனப் படுகொலை’ என்று வர்ணிக்கும் சரித்திர ஆர்வலர்கள் உண்டு.

சோவியத் யூனியன் உழைப்பாளிகளின் சொர்க்கம் என்ற இமேஜ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த அராஜகம் எப்படியோ வெளியில் கசிய அது வெளி உலகுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சோவியத் யூனியன் அரசு அவசர அவசரமாக ‘உக்ரைனில் யாரும் பசியால் இறக்கவில்லை. நோய்களால்தான் இறந்தனர்’ என்று சாதித்தது.

இது பழங்கதை. என்றாலும் இதன் தாக்கத்தை மறக்க முடியவில்லை எஞ்சிய உக்ரைன் மக்களாலும் அவர்களது வாரிசுகளாலும். ரஷ்யர்களுடன் அவர்களால் நல்லுறவு கொள்ள முடியவில்லை.

இரண்டாம் உலகப் போரின்போது உக்ரைனியர்களில் ஒரு பகுதி ஜெர்மனிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி சோவியத் யூனியனுக்கு ஆதரவாகவும் செயல் பட்டனர்.

ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வந்தது. குருஷேவ் ரஷ்ய அதிபரானார். இவர் உக்ரைன் எல்லைப் பகுதிக்கு அருகிலிருந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் ஸ்டாலின் உக்ரைனுக்கு எதிராக செய்த சதியில் இவரும் பங்கு கொண்டார். என்றாலும் உலகப் போரின்போதும் அதற்குப் பிறகு தனது ஆட்சியிலும் உக்ரைனில் உண்டான பாதிப்புகளைக் களைய முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில்தான் காலப் போக்கில் அடுத்த முக்கிய மாறுதல் ஏற்பட்டது.

உலகில் தன் முத்திரையை மிக அழுத்தமாகவே பதித்தது சோவியத் யூனியன். ஆனால் 1991-ல் அதன் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் சோவியத் யூனியன் கலைக்கப்படுவதாக அறிவித்தார். எதனால் இப்படி கலைக்கப்பட வேண்டும்? கொஞ்சம் எளிமையாகவே அதைப் புரிந்து கொள்வோமே.

சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா. சோவியத் யூனியன் என்பது இத்தனை நாடுகளும் அமைந்த ஒரே நாடாக இருந்தது.

இப்படிப்பட்ட சோவியத் யூனியன் உடைகிறது என்ற செய்தி மற்ற நாடுகளுக்குப் பெரும் வியப்பை அளித்தது. அமெரிக்கா இந்தத் தகவலைக் கொண்டாடித் தீர்த்தது. மற்றொரு சூப்பர் சக்தி முடிவுக்கு வந்தது என்றும், தனது உலகத் தலைமை உறுதியாக்கப்பட்டது என்றும் அமெரிக்கா மகிழ்ந்தது.

சோவியத் யூனியன் எதனால் உடைய வேண்டும் என்பதற்கு எளிதான ஒரே விடை கிடையாது.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x