Published : 29 Jan 2015 10:38 AM
Last Updated : 29 Jan 2015 10:38 AM

உலக மசாலா: 76 அடி நீள அடுப்பு

உலகிலேயே திறந்தவெளியில் இயங்கும் மிகப் பெரிய அடுப்பு டெக்ஸாஸில் இருக்கிறது. 76 அடி நீளம் கொண்ட இந்த அடுப்பில் இரண்டு பக்கங்களிலும் சேர்த்து 24 கதவுகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் 4000 கிலோ இறைச்சியை இங்கே சமைக்க முடியும். ’ஒரு பெரிய விருந்துக்குத் தேவையான அத்தனை உணவுகளையும் இங்கே சுலபமாகச் செய்துவிட முடியும். எங்கு வேண்டுமானாலும் இந்த அடுப்பை ஓட்டிச் சென்று விட முடியும்’ என்கிறார் இதன் உரிமையாளர் டெர்ரி ஃபால்சம். இரண்டு கோடி ரூபாய்க்கு இந்த அடுப்பு விற்பனைக்கு வந்திருக்கிறது.

புகை போக்கிகளுடன் ரயில் பெட்டி மாதிரி இருக்கு!

சிகாகோவில் வசிக்கும் 27 வயது கெவின் ஒரு வித்தியாசமான பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். காயமோ, எலும்பு முறிவோ இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் கெவின், உடல் முழுவதும் கட்டுப் போட்டுக்கொண்டிருக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக கெவினுக்குக் கட்டுப் போடும் பழக்கம் இருந்து வருகிறது. 7 வயதில் கழிவறையில் இருக்கும் தாள்களைச் சுற்றிக் கட்டுப்போட ஆரம்பித்தார். திடீரென்று கீழே விழுந்து எலும்பு முறிந்துவிட்டது. உடனே மருத்துவர் கட்டுப் போட்டுவிட்டார். அன்றிலிருந்து இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். ‘இது விநோதமான பழக்கம்தான். ஆனால் என்னால் விட முடியவில்லை. நத்தை கூட்டுக்குள் நிம்மதியாக இருப்பதைப் போல, கட்டுப் போட்டுக்கொண்டு பாதுக்காப்பாக இருக்கிறேன். வெளியில் செல்லும்போது கூட எல்லோரும் ஆர்வத்தோடு உதவி செய்கிறார்கள்’ என்கிறார் கெவின். இதுவரை 30 லட்சம் ரூபாய் வரை கட்டுப் போடுவதற்காகச் செலவு செய்திருக்கிறார்.

அடக் கொடுமையே… இப்படியெல்லாமா பழக்கத்துக்கு அடிமையாவாங்க!

அலாஸ்காவில் இருக்கிறது விட்டியர் என்ற சின்னஞ்சிறு நகரம். இந்த நகரில் வசிக்கும் 200 குடும்பங்களும் ஒரே குடியிருப்பில் வசிக்கின்றன. 14 மாடி கொண்ட இந்தக் குடியிருப்பில் வீடுகள், கடைகள், மருத்துவமனை, காவல் நிலையம், தேவாலயம் என்று ஒரு நகரில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் அமைந்திருக்கின்றன. இங்கு வசிக்கும் அதிகாரிகளும் சாதாரண மக்களும் ஒரே விதமான வசதிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இங்கிருந்து வெளியே செல்வதற்கு சுரங்கம் ஒன்று இருக்கிறது.

பகலில் மட்டும் இந்தச் சுரங்கம் திறந்திருக்கும். இரவில் அடைத்துவிடுவார்கள். விட்டியரைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தக் குடியிருப்பில் அறைகளும் உணவு விடுதியும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மோசமான வானிலை நிலவுவதால் இங்கு வசிக்கும் மக்கள் எல்லோரும் ஒரே இடத்தில், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ‘இதுவரை நீங்கள் பார்க்காத இயற்கைப் பேரழகு கொண்ட இடத்தைப் பார்க்க விரும்பினால் விட்டியருக்கு வாருங்கள்’ என்கிறார்கள் இந்த நகர வாசிகள்.

குடியிருப்புக்குள் ஒரு நகரம்!

சீனாவின் நான்ஜிங் பகுதி மார்க்கெட்டில் ஒரு பை கிடந்தது. அந்த வழியே வந்த 48 வயது உ ஸுட் பையை எடுத்து, திறந்து பார்த்தார். கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தார். பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். போனையும் அணைத்துவிட்டார். மூன்று நாட்கள் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று யோசித்தார். மூன்றாவது நாள் ஒரு முடிவுக்கு வந்தார். போனில் 2 தகவல்கள் வந்திருந்தன. கண்காணிப்பு கேமராவில் உ பையை எடுத்துச் சென்ற சம்பவம் பதிவாகிவிட்டது. உடனே காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி கேட்டிருந்தனர். பணத்தை ஒப்படைத்த உ, ‘நான் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் அல்ல. ஒரே நேரத்தில் இவ்வளவு பணத்தைப் பார்த்ததும் தடுமாறிவிட்டேன். இது என்னுடைய மூன்று ஆண்டு சம்பளம். ஆனாலும் அப்படியே திருப்பித் தந்துவிட்டேன்’ என்று கூறினார். காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

சின்னத் தடுமாற்றம், எவ்வளவு பெரிய சிக்கலைக் கொடுத்திருக்கு…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x