Published : 03 Jan 2015 10:55 AM
Last Updated : 03 Jan 2015 10:55 AM

உலக மசாலா: நகரும் சக்கர இசைக்குழு

பார்சிலோனாவில் ரோடாஃபோனியோ என்ற இசைக்குழு தெருக்களில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. நான்கு மீட்டர் உயரம் கொண்ட மிகப் பெரிய சக்கரத்தில், நான்கு பேர் அமர்ந்து கிடார், சாக்ஸபோன், ட்ரம்ஸ் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கிறார்கள். சக்கரம் மெதுவாகச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஒருவர் மோட்டாரை இயக்க, மொத்த சக்கரமும் இடம் விட்டு இடம் நகர்ந்து செல்கிறது. பார்சிலோனாவில் இசை, நடன விழாக்களின்போது இந்த நகரும் சக்கர இசைக்குழு கண்டிப்பாக இடம்பெற்று, வீதிவீதியாக நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. ஆஸ்திரியா, சிலி போன்ற நாடுகளிலும் இந்தக் குழுவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இசையைக் கேட்க மட்டுமல்ல, பார்க்கவும் வச்சிட்டீங்க!

ரஷ்யாவைச் சேர்ந்த கோர் ஸ்டனோவ் 79 வயதில் இறந்து போனார். அவர் வளர்த்த நாயை, உறவினர் ஒருவர் பாதுகாப்பதாகக் கூறி அழைத்து வந்தார். உணவும் தண்ணீரும் கொடுப்பதைத் தவிர, நாய் மீது எந்த அக்கறையும் அவர்கள் செலுத்தவில்லை. வீட்டுக்குள்ளும் நாயை அனுமதிக்கவில்லை. மூன்று மாதங்களில் நாய்க்கு அபரிமிதமாக முடி வளர்ந்துவிட்டது. உருவமே மறைந்துவிட்டது. முடியின் எடையை நாயால் சுமக்க முடியவில்லை. மூச்சு விடுவதுகூட கஷ்டமாகிவிட்டது. அருகில் உள்ளவர்கள் விலங்குகள் காப்பகத்திடம் புகார் அளித்தனர். 6 பேர், மூன்று மணி நேரம் செலவிட்டு நாயின் முடிகளை அப்புறப்படுத்தினர். அதற்குப் பிறகுதான் நாய் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

அடப்பாவமே... ஒரு நாய்க்கு இவ்வளவு முடி எப்படி வளருது!

குதித்துக்கொண்டு விளையாடும் ஸ்கிபிங் தெரியும். ஆனால் கால்களை நீட்டி, தரையில் அமர்ந்தபடி விளையாடுகிறார் சீனாவின் யி ஸிஹுவா. இவர் ஜிம்னாஸ்டிக் நிபுணர். 20 வயது ஸிஹுவா, ஒரு நிமிடத்தில் 166 முறை ஸ்கிபிங் செய்தால் உலக சாம்பியன் பட்டம் பெறலாம் என்று முயற்சியில் இறங்கினார். ஆனால் ஒரு நிமிடத்தில் 152 தடவைதான் குதிக்க முடிந்தது. புத்தாண்டில் சாம்பியன் ஆகிவிடுவேன் என்று நம்பிக்கையோடு பயிற்சியில் இருக்கிறார் ஸிஹுவா. உட்கார்ந்துகொண்டு குதிக்கும்போது புண், கொப்புளங்கள் ஏற்படும். தொடர்ந்து மருந்து போட்டுக்கொண்டு, பயிற்சி எடுத்துக்கொள்கிறார். உலக சாதனை நிகழ்த்தாவிட்டாலும் ஸிஹுவா சீன ஊடகங்களில் பிரபலமானவராக வலம் வருகிறார்.

ஐயோ… உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிய மாட்டேங்கிது. இதில் ஸ்கிபிங் எல்லாம் சான்ஸே இல்ல…

மத்திய கிழக்கு நாடுகளில் ஒட்டகங்களுக்கான பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற பந்தயத்தில் ஓர் ஒட்டகம் உடல் முழுவதும் துணியால் தைக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தது. மற்ற ஒட்டகங்களைக் காட்டிலும் வேகமாகச் சென்று பந்தயத்தில் வெற்றியும் பெற்றுவிட்டது. இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் சுல்தான் அல் கெட்பி, ‘ஆடை அணிவதால் ஒட்டகத்தின் எடை குறைகிறது. ஹார்மோன்கள் அதிக நேரம் வேலை செய்கின்றன. அதனால் ஒட்டகம் வேகமாகச் செல்ல முடிகிறது’ என்கிறார். ஒட்டகம் ஜெயித்ததால், மற்ற ஒட்டகங்களுக்கும் ஆடை அணியும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் துணியால் வேகம் அதிகரிக்காது என்று எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

உங்க விளையாட்டுக்கு எல்லாம் ஒட்டகங்கள்தான் கிடைத்ததா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x