Published : 30 Dec 2014 11:31 AM
Last Updated : 30 Dec 2014 11:31 AM

உலக மசாலா: பூமியப் போல இன்னொரு கிரகம்

வாக்குவம் க்ளீனரைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் டைசன் இன்று மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கிறார். 25,000 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரராக இருக்கும் ஜேம்ஸ், இங்கிலாந்து ராணியைவிட 5,000 ஏக்கர் நிலம் அதிகமாக வைத்திருக்கிறார். சின்ன வயதில் விவசாயத்தில் ஆர்வம் அதிகம் இருந்தது. பண்ணைகளில் உருளை, பிளாக்கரண்ட் போன்றவற்றை அறுவடை செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை. விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி, புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார் ஜேம்ஸ் டைசன்.

ஒரு கண்டுபிடிப்பு உங்களை ஓஹோன்னு மாத்திருச்சு ஜேம்ஸ்!

அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டாவில் ஆன் ஸ்டோயர் வசித்து வந்தார். கடந்த வாரம் 114 வயதில் இறந்து போனார். அமெரிக்காவில் மிகவும் வயதான நபர்களில் ஆன் ஏழாவது நபர். ஃபேஸ்புக் மீது தீவிர விசிறியாக இருந்த ஆன், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பிக்க நினைத்தார். ஆனால் 1905ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு ஃபேஸ்புக் ஆரம்பிக்க வழியில்லை. தன்னுடைய வயதைக் குறைத்துப் போட்டு, ஃபேஸ்புக் ஆரம்பிக்கவும் ஆனுக்கு விருப்பமில்லை. தன் எண்ணத்தைக் கடிதமாக எழுதி அனுப்பினார். ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து அவரது 114வது பிறந்தநாளுக்கு ஒரு பூங்கொத்து மட்டும் வந்து சேர்ந்தது. தன்னுடைய கடைசிக் காலம் வரை ஐபாட், நண்பர்களுடன் வீடியோ சாட் என்று தொழிநுட்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட தன் அம்மாவால், அவர் விரும்பியபடி ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்க முடியவில்லை என்று வருந்துகிறார் ஆனின் 85 வயது மகன் ஹார்லன்.

ஆர்வத்துக்கு வயது தடையில்லை…

2013ம் ஆண்டு மே மாதத்தில் கெப்ளர் விண்கலம் பழுதாகி, ஓய்வெடுத்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 18 அன்று, கெப்ளர் விண்கலம் தன்னைத் தானே மீட்டுக்கொண்டு, இயங்க ஆரம்பித்திருக்கிறது. கெப்ளர் அனுப்பிய தகவல்களின்படி பூமியைப் போன்ற மிகப் பெரிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு `சூப்பர் எர்த்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். பூமியில் இருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த சூப்பர் எர்த், 32,000 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டது. பூமியை விட 2.5 மடங்கு பெரியது. பூமியைவிட சுமார் 12 மடங்கு எடை அதிகம் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சுவாரசியமான கண்டுபிடிப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x