Published : 22 Aug 2017 10:04 AM
Last Updated : 22 Aug 2017 10:04 AM

சிங்கப்பூர் கடல் பகுதியில் சரக்கு கப்பலுடன் மோதியதில் அமெரிக்க போர்க் கப்பல் சேதம்: 10 வீரர்களை காணவில்லை

சிங்கப்பூர் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்காவின் போர்க் கப்பல் திடீரென மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அமெரிக்க வீரர்கள் 10 பேர் காணவில்லை. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜான் எஸ் மெக்கெய்ன் என்ற போர்க் கப்பல் சிங்கப்பூரின் கிழக்கு கடல் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள துறைமுகத்தில் நிற்பதற்கு தயாரான வேளையில், லிபியாவில் இருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த ‘அல்னிக் எம்சி’ என்ற சரக்கு கப்பலுடன் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.24 மணிக்கு திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் போர்க் கப்பல் சேதம் அடைந்தது.

கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல், போர்க் கப்பலை விட 3 மடங்கு பெரியது. அதில் தைவானில் இருந்து 12 ஆயிரம் டன்னுக்கும் மேல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் வந்து கொண்டிருந்தது. அதனால் போர்க் கப்பல் சேதம் அடைந்தது. எனினும், அதிநவீன ரேடார்களைக் கொண்ட அமெரிக்க போர்க் கப்பல் விபத்தில் சிக்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த போர்க் கப்பல் விபத்தில் சிக்குவது இது 2-வது முறையாகும்.

இதுகுறித்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘போர்க் கப்பல் மோதியதில் சரக்கு கப்பலின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. எனினும், கப்பலில் இருந்து எண்ணெய் எதுவும் கடலில் சிந்தவில்லை’’ என்றனர். இந்த விபத்தில் போர்க் கப்பலில் இருந்து 10 வீரர்கள் காணவில்லை. மேலும் படுகாயம் அடைந்தனர்.

காணாமல் போனவர்களை சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தீவிரமாக தேடி வருகின்றன. இதுகுறித்து மலேசிய கப்பல் படை தளபதி அட்மிரல் கமாருல்ஜமான் கூறும்போது, ‘‘காணாமல் போன வீரர்கள் பற்றி மீனவர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கிடையில் விபத்தில் சிக்கிய போர்க் கப்பல் சிங்கப்பூரின் சாங்கி கப்பல்படை தளத்துக்கு பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x