Published : 24 Aug 2017 10:01 AM
Last Updated : 24 Aug 2017 10:01 AM

சரக்கு கப்பலுடன் மோதி சேதமடைந்த அமெரிக்க போர்க் கப்பலின்தளபதி உடனடி பதவி நீக்கம்

அமெரிக்க போர்க்கப்பல் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் கடல் பகுதியில் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த போர்க் கப்பல் தளபதி நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “போர்க் கப்பலை இயக்கும் திறமையை இழந்துவிட்ட காரணத்தால் வைஸ் அட்மிரல் ஜோசப் ஆவ்காய்ன், கப்பல் தளபதி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது. இவருக்கு பதில் ரியர் அட்மிரல் பில் சாயர் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21-ம் தேதி சிங்கப்பூர் கடல் பகுதியில், அமெரிக்காவின் ‘ஜான் எஸ் மெக்கெய்ன்’ என்ற போர்க் கப்பல், அல்னிக் எம் சி என்ற எண்ணெய் டேங்கர் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் போர்க் கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். போர்க் கப்பல் பலத்த சேதம் அடைந்தது.

இந்தக் கப்பல் ஜப்பான் நாட்டின் யோகோசுகா பகுதியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஆசிய பிராந்தியத்தில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்தின் மையப் புள்ளியாக இந்தக் கப்பல் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் மட்டும் பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் 4 போர்க் கப்பல்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் ஜப்பான் கடல் பகுதியில் யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்டு என்ற போர்க் கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதியது. இதில் 7 மாலுமிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x