Last Updated : 22 Aug, 2017 08:12 PM

 

Published : 22 Aug 2017 08:12 PM
Last Updated : 22 Aug 2017 08:12 PM

அமெரிக்காவின் பல பகுதிகளை பகலில் இருட்டாக்கிய அரிதான முழு சூரிய கிரகணம்

தொலைநோக்கிகள், கேமராக்கள், கண்பாதுகாப்பு கண்ணாடிகள் சகிதம் அமெரிக்கர்கள் குதூகலத்துடன் முழு சூரிய கிரகணத்தைக் கொண்டாட்டமாக அனுபவித்தனர்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்கா இத்தகைய முழு சூரிய கிரகணத்தை கண்டு களித்துள்ளது. பூமி, சந்திரன், சூரியன் ஒரே நேர்கோட்டின் கீழ் வருவது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும், பகலை இரவாக மாற்றக்கூடியவை இவை என்றாலும் இவை மனிதர்கள் இல்லாத இடத்தில்தான் ஏற்படும். சமூகவலைத்தள யுகமான இக்காலக்கட்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியில் இந்த முழு சூரிய கிரகண நிகழ்வு ஏற்பட்டுள்ளது பலரையும் வித்தியாசமான அனுபவத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.

சூரியனை சந்திரன் முழுதும் மறைத்த போது இருள் கவிய, வெப்பநிலை சடசடவென இறங்கியது, பறவைகள் கூடுகளுக்குத் திரும்பி அமைதி காத்தன, பகல் வேளையில் வானில் நட்சத்திரங்கள் தோன்றின. சுமார் 4,200கிமீ தூரத்திற்கு இருள் கவிய மக்கள் ஆரவாரக் கூச்சல் எழுப்பினர்.

பாய்சே, இதாஹோ ஆகிய பகுதிகளில் சூரியன் 99% மறைந்தது. மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சிறிது நேரம் தெருவிளக்குகளும் எரிய விடப்பட்டன.

வரலாற்றில் அதிகம் பேர் கண்டு களித்த அதிக புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கிரகணம் இதுவே.

முழு சூரியகிரகணத்தைப் பார்க்க ஒருநாள் பயணம் போதும் என்ற தொலையில் இருந்தவர்கள் மட்டும் 200 மில்லியன் பேர். பூங்காக்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடியது. மேகம் சூழ்ந்து வாழ்விலே ஒருமுறை முழு கிரகணக்காட்சியை மறைத்து விடுமோ என்று பலரும் அஞ்சினர்.

இதுதவிர நாசா இதனை நேரலை செய்ததை சுமார் 4.4 மில்லியன் மக்கள் கண்டு களித்தனர்.

முழு சூரியகிரகணத்தைப் பார்க்கக் கூடியதாக 14 மாகாணங்கள் இருந்தன. சிலர் 2 நிமிடங்கள் 44 விநாடிகள் முழு இருளை அனுபவித்தனர்.

அமெரிக்காவில் அடுத்த முழு சூரிய கிரகணம் 2024-ம் ஆண்டு நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x