Published : 31 Aug 2017 09:38 AM
Last Updated : 31 Aug 2017 09:38 AM

உலக மசாலா: இந்த அழகான நட்பு தொடரட்டும்!

தா

யிடமிருந்து பிரிந்து தனியாக நின்ற சிங்கக் குட்டி, துருக்கி எல்லைப் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது. பிறகு காஸியன்டெப் வனவிலங்குகள் பூங்காவில் சேர்க்கப்பட்டது. ஒரு மாதக் குழந்தையாக ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்த சிங்கக் குட்டிக்கு லாக்டோஸ் இல்லாத பால் கொடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 8 தடவை பால் குடித்து, தேவையான வைட்டமின்கள் எடுத்துக்கொண்டவுடன் சிங்கக்குட்டி ஆரோக்கியமாக மாறிவிட்டது. கேன் குரங்குதான் சிங்கக் குட்டியின் உற்ற தோழன். மிகவும் அக்கறையாக சிங்கக் குட்டியைக் கவனித்துக்கொள்கிறது. இரண்டும் சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

இந்த அழகான நட்பு தொடரட்டும்!

சீ

னாவின் ஹாங்ஸோவ் பகுதியைச் சேர்ந்த 55 வயது பாய் யான், காவல் துறையைச் சேர்ந்த நாய்களுக்கான பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாகக் காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற நாய்களுக்காக ஒரு காப்பகத்தை அமைத்து, பராமரித்து வருகிறார். இதற்காக 96 லட்சம் ரூபாயை இதுவரை செலவு செய்திருக்கிறார்! “2004-ம் ஆண்டு இந்தப் பணியில் சேர்ந்து, ஒரே நேரத்தில் 30 நாய்களுக்குப் பயிற்சியளித்தேன். என் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை நாய்களுடனே செலவிடுகிறேன். நாய்களும் எனக்குப் பல மடங்கு அன்பையும் விசுவாசத்தையும் திருப்பி அளிக்கின்றன. இப்படிப் பயிற்சி பெற்ற நாய்கள் ஓய்வு பெற்றவுடன், தத்து கொடுக்கப்படுகின்றன, காப்பகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால் அங்கு இவை மிகச் சாதாரணமாக நடத்தப்படுகின்றன. கழுத்தில் கயிற்றைக் கட்டி வைத்துவிடுகிறார்கள். இந்தக் காட்சிகளைக் கண்டபோது என் மனம் வேதனை அடைந்தது. காவல் துறையில் புத்திசாலித்தனமாக, மனிதர்களுக்கு இணையாக வேலை செய்த நாய்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுதானே நியாயம் என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் காப்பகத்தை ஆரம்பித்தேன். இங்கே நாய்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன். விளையாடலாம். ஓய்வெடுக்கலாம். குளிக்கலாம். நல்ல உணவைச் சாப்பிடலாம். சுதந்திரமாகச் சுற்றி வரலாம். இங்கே ஒரு மருத்துவமனையும் உண்டு. புற்றுநோயிலிருந்து அனைத்து நோய்களுக்கும் இங்கே சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆரோக்கியமான நாய்களை விட, நோய் வந்த நாய்கள் மனிதர்களின் அரவணைப்பை அதிகம் எதிர்பார்க்கின்றன. தினமும் 3 வேளை நாய்களைச் சந்திக்கிறேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவைத் தயார் செய்து கொடுத்துவிட்டு, என் பணிக்குச் செல்வேன். இங்குள்ள ஒவ்வொரு நாயையும் தனித் தனியாகக் கவனித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாயையும் படம் எடுத்து வைத்திருக்கிறேன். நாய்கள் ஓய்வு பெற்ற பிறகு மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் எனக்கும் நிறைவாக இருக்கிறது. நான் அதிகம் செலவு செய்வதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். என் அருமை தோழர்களுக்காகத்தானே செலவு செய்கிறேன். இதில் எனக்கு எந்தவித வருத்தமோ, கஷ்டமோ இல்லை. இதுவரை பலரும் நன்கொடை தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இது என் குடும்பம், நானே பார்த்துக்கொள்வேன்” என்கிறார் பாய் யான்.

நாய்களின் தோழர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x