Published : 27 Jul 2017 09:35 AM
Last Updated : 27 Jul 2017 09:35 AM

ரஷ்யா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ் அவை) பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 419 உறுப்பினர்களும் எதிராக வெறும் 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டது (ட்ரம்புக்கு ஆதரவாக) மற்றும் உக்ரைன், சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தியது ஆகிய காரணங்களுக்காக ரஷ்யாவுக்கு எதிராக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதற்காக ஈரான் மீதும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்காக வடகொரியா மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற செனட் சபையின் (மேலவைக்கு) ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த அவையிலும் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பு உள்ளது. ஆனால், வடகொரியாவையும் இதில் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பிரதிநிதிகள் சபை தலைவர் பால் ரயன் கூறும்போது, “அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி, எதிரி நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்” என்றார்.

பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்கள் குழுத் தலைவரும் இந்த மசோதாவை வடிவமைத்தவருமான எட் ராய்ஸ் கூறும்போது, “உலகின் வெவ்வேறு பகுதியில் உள்ள இந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. அத்துடன் தங்களது பக்கத்து நாடுகளைச் சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

செனட் சபையின் சிறுபான்மையின தலைவர் சார்லஸ் ஸ்கூமர் கூறும்போது, “அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதை சகித்துக் கொள்ள முடியாது என்ற கடுமையான சமிக்ஞையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த மசோதா ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x