Published : 28 Jul 2017 09:54 AM
Last Updated : 28 Jul 2017 09:54 AM

உலக மசாலா: ஒரே வாரத்தில் இரண்டு லாட்டரி

கலிபோர்னியாவில் வசிக்கும் 19 வயது ரோசா டோமிங்கஸ், ஒரே வாரத்தில் இரண்டு முறை லாட்டரியில் பரிசு வென்றிருக்கிறார். கேஸ் ஸ்டேஷனில் 320 ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். ரூ.3 கோடியே 56 லட்சம் பரிசு விழுந்துவிட்டது”பரிசு கிடைத்த செய்தி அறிந்தவுடன் என் உடல் நடுங்கியது. மகிழ்ச்சியில் அழுகை வந்தது. பிறகு சகஜ நிலைக்கு வந்தவுடன் வேலையை விட்டுவிட முடிவு செய்தேன். இப்போது நான் பணக்காரராகிவிட்டேன். சில நாட்களில் மீண்டும் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினேன். என்ன ஆச்சரியம், ரூ.64 லட்சம் பரிசு கிடைத்துவிட்டது. ஒரே வாரத்தில் இரண்டு பரிசுகளை என்னால் நம்பவே முடியவில்லை. மொத்தம் ரூ.4 கோடியே 20 லட்சம் எனக்குக் கிடைத்திருக்கிறது. நல்ல கார் வாங்க வேண்டும், நிறைய ஷாப்பிங் செல்ல வேண்டும்” என்கிறார் ரோசா.

ஒரே வாரத்தில் ஓஹோ வாழ்க்கை!

பிரிட்டனில் வசிக்கும் 22 வயது மில்லி ஓஸ்மான், தான் மருத்துவம் செய்துகொண்ட மருத்துவமனையிலேயே செவிலியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். சிறு வயதிலேயே ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மில்லி.

இப்ஸ்விச் குழந்தைகள் மருத்துவமனையில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். சில மாதங்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து வெளிவந்துவிட்டார். “மருத்துவமனை என்றாலே குழந்தைகள் பயப்படுவார்கள். ஆனால் நான் மிகவும் சந்தோஷமாகச் செல்வேன். மருத்துவர்களும் செவிலியர்களும் என்னை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொண்டார்கள்.

நோயால் மிகவும் சோர்வடையும் நேரங்களில் என்னை ஏதாவது செய்து உற்சாகப்படுத்தி விடுவார்கள். கீமோதெரபி எடுத்ததால் என் தலை முடியெல்லாம் கொட்டியபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. வாழ்வதுதான் முக்கியம் என்பதை எனக்குப் புரியும் விதத்தில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். இந்த நல்ல மனிதர்களால்தான் நான் கடுமையான காலகட்டத்திலும் தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வாழ முடிந்தது.

இவர்களை எல்லாம் பார்த்துதான் நான் ஒரு செவிலியராக வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் சிகிச்சை என்று சமாளித்து, ஒரு கட்டத்தில் புற்றுநோயிலிருந்து வெளிவந்துவிட்டேன். நான் நினைத்தது போல இன்று செவிலியராகவும் மாறிவிட்டேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே எனக்கு வேலையும் கிடைத்துவிட்டதில் அளவற்ற சந்தோஷத்தில் இருக்கிறேன்.

இந்த மருத்துவமனையும் மருத்துவர்களும் செவிலியர்களும் எனக்கு ஏற்கெனவே நன்கு பழக்கமானவர்கள். என்னை இப்போதும் அன்பாக நடத்துகிறார்கள். இவர்களிடமிருந்து கற்ற இந்த அன்பையும் அக்கறையையும் இங்கே சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் காண்பித்து, என்னுடைய நன்றியை தெரிவிக்க இருக்கிறேன். இங்கே சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் என்னைப் பார்த்து நம்பிக்கைகொள்கிறார்கள். ஒரு செவிலியராக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” என்கிறார் மில்லி.

ஒரு நோயாளி, செவிலியரான அற்புதம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x