Published : 27 Jul 2017 09:33 AM
Last Updated : 27 Jul 2017 09:33 AM

உலக மசாலா: பெண் ராபின்சன் க்ரூசோ!

கனடாவிலுள்ள சேபில் தீவில் 67 வயது ஜோய் லூகாஸ் கடந்த 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். 21 வயதில் இளம் விஞ்ஞானியாக ஆய்வுக்கு வந்தவர், இந்தத் தீவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இங்கு மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் அரசால் ஓர் அலுவலகக் கட்டிடம் இங்கு கட்டப்பட்டது. ஆனால் அங்கு யாரும் வருவதில்லை. 26 கி.மீ. நீளமுள்ள இந்தத் தீவில் 400 காட்டு குதிரைகள், 3 லட்சம் சாம்பல் சீல்கள், 350 பறவையினங்கள் வாழ்கின்றன. இவற்றோடு ஒற்றை மனிதராக ஜோய் வாழ்ந்துவருகிறார். “ஆரம்பத்தில் இந்தத் தீவு வாழ்க்கை எனக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் இயற்கையின் மீதுள்ள அளவற்ற ஆர்வம் இந்தத் தீவு நோக்கி செலுத்திக் கொண்டிருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதும் விபத்தில் மாட்டிக்கொண்டபோதும் என் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஆனாலும் குணமான பிறகு, என்னால் அங்கே இருக்க முடியவில்லை. படகு அல்லது சிறிய விமானம் மூலமே இந்தத் தீவுக்கு வர முடியும். வருடத்தில் 125 நாட்கள் பனியால் மூடப்பட்டிருக்கும். தேவை ஏற்படும்போது தீவை விட்டு வெளியேறி, பொருட்களை வாங்கி வந்துவிடுவேன். ஒரு நோட்டையும் பைனாகுலரையும் எடுத்துக்கொண்டு தினமும் ஆராய்ச்சிக்குக் கிளம்பிவிடுவேன். நான் சேகரித்த தகவல்களைத் தொகுத்து, ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைத்துவிடுவேன். கப்பலில் வருகிறவர்கள் இந்தத் தீவில் பேய்கள் நடமாடுவதாக என்னிடமே சொல்வார்கள். நான் ஒரு நாளும் எந்தப் பேயையும் பார்த்ததில்லை. இப்போது இந்தத் தீவு கனடாவின் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கே ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு அவ்வப்போது சில ஊழியர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள்தான் எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு. அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதால் எனக்கு தனிமை குறித்து எந்த வருத்தமும் இல்லை. வயதாகிவிட்டதால் என் குடும்பத்தினர் இந்தத் தீவில் வசிப்பது குறித்து கவலை தெரிவிக்கிறார்கள்” என்கிறார் ஜோய் லூகாஸ்.

பெண் ராபின்சன் க்ரூசோ!

நாய்களின் பொழுதுபோக்குக்காக ஜெர்மனி ரேடியோ ஸ்டேஷன் ஒன்று, 24 மணிநேரமும் பிரத்யேக இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. இசை கேட்கும் நாய்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள். 30 வயது ஸ்டீபன்தான் இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர். ஆரம்பத்தில் விளையாட்டுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. “என் நாய் தனியாக இருந்தால் வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் உடைத்துவிடும். பயங்கரமாக குலைக்கும். ஏதாவது இசையைப் போட்டுவிட்டால் அமைதியாக அமர்ந்துவிடும். அதைப் பார்த்துதான் நான் இந்த யோசனையை வழங்கினேன். நாய்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ரேடியோ ஸ்டேஷன் வேகமாகப் பிரபலமாகி வருகிறது” என்கிறார் ஸ்டீபன்.

நாய்களுக்காக ஒரு ரேடியோ ஸ்டேஷன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x