Published : 28 Jul 2017 09:52 AM
Last Updated : 28 Jul 2017 09:52 AM

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க தடை: அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்க தடை விதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

இதுதொடர்பாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க ராணுவத்தில் இனி எந்தப் பதவியிலும் திருநங்கைகள் பணியாற்ற அரசு அனுமதிக்காது என பரிந்துரை செய்கிறேன். என்னுடைய ராணுவ ஜெனரல்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார். எனினும், இதுபற்றி முறைப்படி எந்த ஒரு அறிவிப்பையும் ட்ரம்ப் வெளியிடவில்லை.

ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸுடன் (ஓய்வுபெற்ற கடற்படை ஜெனரல்) ஆலோசனை நடத்தியதாக ட்ரம்ப் குறிப்பிடவில்லை. திருநங்கைகளை ராணுவத்தில் சேர்ப்பதால் ஏற்படும் கூடுதல் செலவுகள் மற்றும் நன்மைகள் பற்றி 6 மாதங்களுக்கு மதிப்பீடு செய்யுமாறு ராணுவ தளபதிகளுக்கு அமைச்சர் மேட்டிஸ் ஒரு மாதத்துக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவத்தில் எத்தனை திருநங்கைகள் பணி புரிகிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க பாதுகாப்புத் துறை மறுத்துவிட்டது. எனினும், 13 லட்சம் வீரர்களில் 1,320 முதல் 6,630 திருநங்கைகள் இருக்கலாம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இதனிடையே இவரது இந்த அறிவிப்புக்கு இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வியட்நாம் போரின் ஹீரோவும் குடியரசு கட்சியின் அரிசோனா செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெய்ன் கூறும்போது, “ட்ரம்ப் முடிவு தவறானது. இப்போதைய மருத்துவ ரீதியாக தகுதியுடைய அனைவரையும் ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் போரிட, பயிற்சிப் பெற தகுதியுடைய வீரர்களைப் பணியிலிருந்து நீக்கக் கூடாது” என்றார்.

இதனால் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் திருநங்கைகளின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.

அதிபர் பராக் ஒபாமா ஆட்சியின்போது (2015 டிசம்பர) அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டர் ராணுவத்தின் அனைத்து பதவியிலும் பெண்கள் இடம்பெறுவர் என அறிவித்தார். இதையடுத்து திருநங்கைகளுக்கும் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x