Last Updated : 14 Jul, 2017 07:48 PM

 

Published : 14 Jul 2017 07:48 PM
Last Updated : 14 Jul 2017 07:48 PM

இந்திய துணைக்கண்டத்தில் அல்காய்தா செயல்பாடு தீவிரம்: அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

இந்திய துணைக் கண்டத்தில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் செயல்பாடு தீவிரமடைந்து வருவதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உள்நாட்டு பாதுகாப்பு துணைக்குழு உறுப்பினர்களிடம் (தீவிரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு) தீவிரவாத தடுப்புத் துறை நிபுணர் சேத் ஜி ஜோன்ஸ் கூறியதாவது:

அல்காய்தா தீவிரவாத அமைப்பின் செயல்பாடு இந்திய துணைக் கண்டத்தில் தீவிரமடைந்து வருகிறது. இப்போது இந்த அமைப்பில் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட், காந்தஹார், ஜபுல், பக்டிகா, கஜினி மற்றும் நுரிஸ்தான் மாகாணங்களில் அல்காய்தா அமைப்பின் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அல்காய்தா அமைப்பு மிகப்பெரிய அளவில் கிளைவிட்டு காலூன்றி உள்ளது. இதுதவிர, தலிபான், தெரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் லஷ்கர்-இ-ஜாங்வி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் ஏற்பட்டுள்ள நெருக்கம் அல்காய்தா அமைப்பு விரிவடைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

வங்கதேசத்திலும் அல்காய்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி உள்ளது. மேலும், அல்காய்தா அமைப்பு தனது ஊடக பிரிவின் மூலம் இந்தியாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் மலரவைக்க அல்காய்தா அமைப்பின் புதிய பிரிவு (காய்தா அல்-ஜிஹாத்) இந்தியத் துணைக்கண்டத்தில் நிறுவப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

காய்தா-அல்-ஜிஹாத் பிரிவின் தலைவராக உள்ள இந்தியாவைச் சேர்ந்த அசிம் உமர் பாகிஸ்தானி்ல் முகாம் கொண்டு செயல்படும் ஹர்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்புக்கு இந்திய துணைக் கண்டம் முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் கேத்ரின் ஜிம்மர்மேன் கூறும்போது, “புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அய்மான் அல்-ஜவாஹிரி அறிவித்த பிறகு இந்திய துணைக் கண்டத்தில் அல்காய்தா அமைப்பு வலுவிழந்து வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x