Published : 11 Nov 2013 10:42 PM
Last Updated : 11 Nov 2013 10:42 PM

மன்மோகன் புறக்கணிப்பால் இந்திய - இலங்கை உறவில் விரிசல்

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது, இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாதது இலங்கைக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் திச அட்டநாயகே, "மன்மோகன் சிங் வராதது நமக்கு மிகப்பெரிய இழப்பு. இந்தியாவுடனான நமது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. யாருமே இதை நல்ல விஷயம் என்று கூற மாட்டார்கள்.

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இலங்கை முயற்சிக்க வேண்டும். தூதரக ரீதியாகவும், வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படையிலும் இநதியாவுடனான உறவில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். காமன்வெல்த் மாநாட்டுக்கு பின்பு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இலங்கை அரசு முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று அதிபர் ராஜபக்சேவுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான கெகலிய ராம்புக்வெல்லா கூறுகையில், "அனைவரையும் அழைப்பது எங்களின் கடமை. அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவர்களின் விருப்பம. இது 54 நாடுகள் பங்கேற்கும் மாநாடு. கடந்த முறையை விட இந்த முறை அதிக எண்ணிக்கையிலான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், "உள்நாட்டு அரசியல் நிர்பந்தத்தால் இந்திய பிரதமர் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளார். அவரின் முடிவால் எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

இதற்கு முன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இரு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. இருநாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்போதே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x