Published : 04 Oct 2013 12:30 PM
Last Updated : 04 Oct 2013 12:30 PM

இத்தாலியில் படகு கவிழ்ந்து 82 பேர் பலி

இத்தாலிக்கு சொந்தமான தீவுப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு வியாழக்கிழமை கவிழ்ந்ததில் 82 பேர் இறந்தனர். 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து இத்தாலியின் லம்பெடுசா கியூசி நிகோலினி கூறியதாவது:

லம்பெடுசா தீவுக்கருகே 500 அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவப் பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 2 குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 82 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, கடலோர காவல் படையினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிறிய அளவில் தீப்பந்தம் ஏற்றப்பட்டதாகவும் அந்தத் தீ வேகமாக பரவியதால் அந்தப் படகு கவிழ்ந்ததாகவும் உயிர் தப்பியவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 150க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றார் நிகோலினி.

இரிட்ரியா மற்றும் சோமாலியாவிலிருந்து புறப்பட்டு வந்ததாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். லிபிய கடற்கரை பகுதியிலிருந்து அவர்கள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இது ஒரு மிகப்பெரிய துயரச் சம்பவம் என இத்தாலி பிரதமர் என்ரிகோ லெட்டா சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x