Published : 07 Jun 2016 11:01 AM
Last Updated : 07 Jun 2016 11:01 AM

உலக மசாலா: ஒளி புகாத கண்ணாடிகள்

இன்று பெரும்பாலான பொழுதுகள் ஸ்மார்ட்போன் களிலேயே கழிகின்றன. ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன், கம்ப்யூட்டர் ஸ்க்ரீன், டிவி ஸ்க்ரீன் என்று கண்கள் ஏதாவது ஸ்கீரினையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. இதனால் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் பேசும் வாய்ப்பே குறைந்து போய்விட்டது. சிலர் மிக மோசமாகத் தொழில்நுட்பங்களுக்கு அடிமைகளாகவே மாறிவிடுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வைக் கொண்டு வரவே ஒளிபுகா கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறார் சினோ கிம்.

’’ஒரே இடத்தை நம் கண்கள் அதிக நேரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சோர்வடைந்து விடுகின்றன. இந்தக் கண்ணாடியில் மெல்லிய ஒளிபுகா காகிதம் ஒட்டப்பட்டிருக்கிறது. தலை மீது இருக்கும் வெப்கேமும் போனும் இணைக்கப்பட்டிருக்கும். எப்போது கண் சோர்வடைகிறதோ, அப்போது கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஒளிபுகா காகிதம் வேலை செய்ய ஆரம்பிக்கும். எதையும் பார்க்க முடியாது. கண்கள் ஓய்வெடுக்கும். இந்தக் கண்ணாடியை இன்னும் மேன்மைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன்’’ என்கிறார் சினோ கிம்.

கண் கெட்டுப் போறதுக்குள்ள சீக்கிரம் கொண்டு வாங்க கிம்…



குரோவேசியாவைச் சேர்ந்த கலைஞர் டைனோ டாமிக். பென்சில்களையும் பேப்பர்களையும் வைத்து ஓவியங்களைத் தீட்டிப் புகழ்பெற்றவர், தற்போது உப்பு ஓவியங்களைத் தீட்டி வருகிறார். கருப்புத் துணிகளில் உப்புத் துகள்களைத் தூவி, பிரமாதமான ஓவியங்களைப் படைத்துவிடுகிறார்! ’’ஓவிய ஆசிரியராக இருந்த நான், என் ஆர்வத்தின் பேரில் டாட்டூ கலையையும் கற்றுக்கொண்டேன். ஒரே இடத்தில் தேங்கிவிடக்கூடாது என்பதற்காக புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறேன். வரைந்து வரைந்து கை வலிக்கும்போது, ஓய்வு கொடுப்பதற்காக உப்பில் வரைகிறேன். உப்பு மூலம் வரையும்போது மணிக்கட்டுக்கு அவ்வளவு வேலை இருக்காது.

தோள்களுக்குத்தான் வேலை அதிகம். பிரஷ் பிடித்து வரைவதற்கும் உப்பில் வரைவதற்கும் எனக்கு அதிகம் வித்தியாசம் தெரியவில்லை. மூன்றே வாரங்களில் உப்பு ஓவியங்களில் தேர்ந்தவனாகிவிட்டேன். மணிக்கணக்கில் வரைந்துவிட்டு, விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன். பிறகு வரைந்த கைகளாலேயே ஓவியத்தைக் கலைத்து விடுவேன். உணவுக்கு முக்கியமான உப்பை வைத்துச் செய்யப்படும் இந்த எளிய ஓவியங்கள் அற்புதமானவையாக அமைந்துவிடுவதில் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!’’ என்கிறார் டைனோ டாமிக்.

அட! எங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறது டைனோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x