Published : 24 Jul 2016 10:53 AM
Last Updated : 24 Jul 2016 10:53 AM

உலக மசாலா: அசத்தலான டாட்டூகள்!

சீனாவில் வசிக்கும் சாங் பெய்லன் ‘எலாங் பள்ளத்தாக்கின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். மரங்கள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து, ‘கலைக் கிராமம்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கிராமம் பண்டைய சீன நாகரிகத்தை உலகத்துக்குச் சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கி.மு.3-ம் நூற்றாண்டில் எலாங் பள்ளத்தாக்கு அரசியலிலும் நாகரிகத்திலும் சிறப்புற்று விளங்கியது. பழங்கால கலாச்சாரங்கள் இங்கே தோன்றி, மற்ற இடங்களில் பரவியதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இன்றோ அதற்கான எந்த ஓர் அடையாளமும் இந்தப் பள்ளத்தாக்கில் இல்லை. “நான் அமெரிக்கா சென்றபோது, மலையில் அமைக்கப்பட்டிருந்த க்ரேஸி ஹார்ஸ் நினைவுச் சின்னத்தைப் பார்த்தேன். இவர் பூர்வகுடி அமெரிக்க வீரர். அதுபோன்ற ஒரு கலைப் படைப்பை எலாங் பள்ளத்தாக்கில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 1996-ம் ஆண்டு பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன். 2 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை வாங்கினேன். பழங்கால நாகரிகங்களைப் பற்றிப் படித்தேன். க்ரேஸி ஹார்ஸ் நினைவுச் சின்னத்தைப் போலவே இது அமைய வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்களும் கட்டிடத் தொழிலாளர்களும் அதிகம் இருந்தனர். அவர்களிடமிருந்து கற்களை வாங்கினேன். என்னுடைய முயற்சியைப் புரிந்துகொண்டு பலரும் உதவ முன்வந்தனர். அருகில் இருக்கும் கிராம மக்களின் பங்களிப்பை மறக்கவே முடியாது. அவர்கள் இன்றி, கலைக் கிராமம் சாத்தியமே இல்லை. 20 ஆண்டுகளில் முழுக்க முழுக்க கற்களால் அமைக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்ட கலைக் கிராமத்தை உருவாக்கிவிட்டோம். இது சீனாவின் நுவோ நாகரிகத்தைப் பிரதிபலிக்கிறது. இன்று பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. நான் நினைத்தது போலவே ஏராளமானவர்கள் வருகிறார்கள். சீனர்களின் பழங்கால நாகரிகத்தை அறிந்துகொள்கிறார்கள். இதுபோலவே இன்றைய நாகரிக கிராமத்தை அடுத்த 20 ஆண்டுகளில் அருகில் அமைக்க இருக்கிறேன்’’ என்கிறார் சாங் பெய்லன்.

உங்கள் பணி தொடரட்டும் சாங் பெய்லன்!

நியுஸிலாந்தைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஸ்டீவ் பட்சர். ஹைபர் ரியாலிஸ்டிக் டாட்டூகளைப் போடுவதில் நிபுணர். அழகான ஓவியங்களை அப்படியே மனித உடல்களில் டாட்டூவாக வரைந்துவிடுகிறார். உலகம் முழுவதும் ஸ்டீவ் பட்சருக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். டாட்டூ போட்டுக்கொள்வதற்குக் காத்திருக்கிறார்கள். விலங்குகள், பறவைகள், பூக்கள், மனித உருவங்கள் என்று எதை வேண்டுமானாலும் அற்புதமாக வரைந்துவிடுகிறார் ஸ்டீவ். வியர்வை, கண்களில் நீர் போன்றவற்றையும் மிகத் துல்லியமாக வரைவது இவரது தனிச் சிறப்பு. “நான் சாதாரண டாட்டூ கலைஞராகத்தான் இருந்தேன். டாட்டூவுக்காக ஒரு பள்ளி ஆரம்பித்தபோது, என் நண்பர் ஓர் ஓவியத்தைக் கொடுத்து, அதேபோல வரைந்து பார்க்கச் சொன்னார். நிறையப் பயிற்சி செய்தேன். என் நண்பர்களின் கைகளில் வரைந்து பார்த்தேன். தொழில் முறையாக ஆக்லாந்து நகர வீதியில் வரைய ஆரம்பித்தேன். இன்று இந்த ஓவியங்கள் என்னை எங்கோ உயரத்தில் கொண்டு வைத்துவிட்டன.’’ என்கிறார் ஸ்டீவ்.

அசத்தலான டாட்டூகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x