Last Updated : 12 Jun, 2016 11:03 AM

 

Published : 12 Jun 2016 11:03 AM
Last Updated : 12 Jun 2016 11:03 AM

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 6

பனாமா கால்வாய் தொடர்பாக அமெரிக்காவுக்கும் பனாமாவுக்கு மிடையே நிகழ்ந்த மோதல்களைக் கண்டோம். இப்போது பனாமாவை ஆட்சி செய்தவர்களில் சிலர் குறித்துப் பார்க்கலாம்.

பனாமாவின் சரித்திரத்தில் குறிக்கப்பட வேண்டிய ஒரு ராணுவத் தளபதி ஒமர் டொரிஜோஸ். 1929 பிப்ரவரி 13 அன்று பனாமாவிலுள்ள சாண்டியாகோ பகுதியில் பிறந்தவர். இவர் பனாமாவின் ராணுவத்தில் சேர்ந்து விரைவிலேயே அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1968-ல் பனாமாவை ஆட்சி செய்த அதிபர் அர்னுல்ஃபோ ஏரியஸ் என்பவரை ஆட்சியிலிருந்து கீழிறக்கிவிட்டு தான் ஆட்சியைக் கைப்பற்றினார் ஒமர் டொரிஜோஸ்.

1978 வரை தொடர்ந்த இவரது ஆட்சி ஒரு சர்வாதிகாரமாகவே இருந்தது. எனினும் 1977-ல் இவர் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. அது பனாமா கால்வாயை மீண்டும் எப்போது, எப்படி பனாமாவிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான ஒப்பந்தம்.

ராணுவ அதிகாரியாக இருந்து பலவந்தமாக ஆட்சியைக் கலைத்துவிட்டு ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஒமர் டோரிஜோஸ் அதிகாரபூர்வமான அதிபர் இல்லைதான். என்றாலும் அவர் 1968-ல் இருந்து 1981 வரை பனாமாவை ஆட்சி செய்தார்.

சர்வாதிகாரம்தான் என்றாலும் பல சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

முக்கியமாக பனாமா கால்வாயின் மீது தன் நாட்டுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டினார். அமெரிக்காவும் இது தொடர்பாக இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. 1999-ம் ஆண்டுக்குப் பிறகு பனாமா கால்வாய் மீது உரிமை கிடையாது என்பதை எழுத்து வடிவில் அமெரிக்கா எழுதிக் கொடுத்தபோது பனாமாவின் பிரதிநிதி இவர்தான்.

ஒமர் டோரிஜோஸ் வேறொன்றுக்கும் புகழ் பெற்றவர். அவரது பேச்சுகள் புகழ் பெற்றவையாக அமைந்தன. ‘’அமெரிக்கா வுடனான பேச்சு வார்த்தைகளில் நாங்கள் நிற்போம் அல்லது இறப்போம். ஒருக்காலும் மண்டியிடமாட்டோம்’’, “முட்டாள்தனம்தான் மிக அபத்தமானது’’, “நான் கீழே விழுந்தால் தேசியக் கொடியை எடுத்து முத்தமிட்டபடி தொடர்ந்து நடப்பேன்’’. என்றார். பனாமா மக்கள் இதுபோன்ற முழக்கங்களில் புளகாங்கிதப்பட்டார்கள்.

இவர் பனாமா கால்வாய் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து விமர்சனங் களும் எழுந்தன. 1999 வரை அமெரிக்கா வுக்கு பனாமா கால்வாயின் மீது அதிகாரம் கொடுத்தது பற்றி குறைப்பட்டுக் கொண்டவர்கள் உண்டு. சிலர் பனாமா ஒப்பந்தம் ஏதோ அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதுபோல் இருக்கிறது என்றனர்.

இதுபற்றி ஒமர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ‘’மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட இளவரசி ஒருத்தி செருப்புக் கடைக்காரரிடம் வெளியிலிருந்து சிறியதாகவும் உட்புறத்தில் பெரியதாகவும் இருக்கும் ஷூக்கள் வேண்டும் என்றாளாம். அதுபோலத்தான் பனாமா கால்வாய் உடன்படிக்கையில் எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது’ என்றார்.

தனது 52-வது வயதில் விமான விபத்தொன்றில் அவர் இறந்தார். அவர் விமானம் திடீரென்று காணாமல் போனது! பல மணி நேரங்களுக்குப் பிறகுதான் சிதறிய விமானமும் ஒமர் டோரிஜோஸின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டன.

பனாமா துக்கம் அனுஷ்டித்தது. ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்தத் துக்கம் அதிகமாகவே இருந்தது. சர்வாதிகாரியாக இருந்தும் அவர் மதிக்கப்பட்டிருக்கிறார்.

(பின்னொரு காலகட்டத்தில் - அதாவது 2004-ல் இருந்து 2009 வரை- ஒமர் டோரிஜோஸின் மகன் மார்டின் டோரிஜோஸ் பனாமாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்).

இதில் பனாமாவின் தலைவராக இல்லாத வேறொருவரும் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் ஜார்ஜ் லூசியா. இவர் ஆகஸ்ட் 1982-ல் இருந்து பனாமாவின் துணை அதிபராக இருந்தார். அதற்கு முன்பு அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார். 1976-ல் இருந்து 1981 வரை இவர் ஐ.நா.வில் பனாமாவின் நிரந்தரப் பிரதிநிதியாக விளங்கினார்.

பனாமாவில் பிறந்த இவர் பனாமா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த பிறகு, ஹார்வர்டு சட்டக் கல்லூரி, சிகாகோ சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார். ஒரு கட்டத்தில் பனாமா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் விளங்கினார். பனாமா கால்வாய் உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இவர் சிறப்புத் தூதராகச் செயல்பட்டார்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x