Published : 28 Feb 2017 10:34 AM
Last Updated : 28 Feb 2017 10:34 AM

உலக மசாலா: சிரிக்கும் நாய்

இங்கிலாந்தில் வசிக்கும் 13 வயது பஃபி, உலகிலேயே சிரிக்கக்கூடிய நாயாக இருக்கிறது. பஃபியின் உரிமையாளர் ஜில் காக்ஸ், “நான்கு ஆண்டு களுக்கு முன்புதான் பஃபி சிரிப் பதைக் கவனிக்க ஆரம்பித்தோம். ஒரு நாளைக்குக் குறைந்தது 12 தடவையாவது சிரித்துவிடுவாள். தூங்கும்போது, தூங்கி எழும்போது, தோட்டத்தில் இருக்கும்போது, உணவுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும்போது கண்டிப்பாகச் சிரிப்பாள். பஃபி சிரிப்பதை இதுவரை ஆயிரக்கணக்கில் புகைப்படங்களாக எடுத்து வைத்திருக்கிறேன். இணையதளத்தில் பஃபியின் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிலர் நாங்கள் போட்டோஷாப் செய்திருக்கிறோம் என்றும் பஃபியின் வாயில் ஏதோ ஒரு பொருளைத் திணித்து வைத்திருக்கிறோம் என்றும் நினைக்கிறார்கள். பஃபி உண்மையிலேயே சிரிக்கிறாள். அது எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அவள் சிரிப்பதை நாங்களே சந்தேகத்துடன்தான் பார்த்தோம். ஆனால் தினமும் இயல்பாகச் சிரிக்க ஆரம்பித்த பிறகு, உலகிலேயே சிரிக்கக்கூடிய ஒரு நாய் எங்களிடம் இருக்கிறது என்று பெருமையாக இருக்கிறது. நிறையப் பேர் சிரிக்கும் பஃபியின் புகைப்படங்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்க்கும்போது தங்களின் கவலைகள் மறைந்து, புத்துணர்வு கிடைக்கிறது என்கிறார்கள். என் மகன் ஆடம் இதய நோயால் வீட்டில் முடங்கிக் கிடக்கிறான். அவன் ஓரளவு சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் பஃபிதான். அவன் சற்று சோர்வாக இருந்தாலும் ஏதோ ஆபத்து என்று கண்டுபிடித்து எங்களிடம் சொல்லிவிடுவாள் பஃபி. சமீபத்தில் பஃபி மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்டாள். அதனால் சோஃபா, மெத்தை படுக்கைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். எவ்வளவு குறும்பு செய்தாலும் ஒரு புன்னகையால் நம்மை வசீகரித்துவிடுகிறாள் பஃபி!” என்கிறார்.

சிரிக்கும் நாய்!

ஜப்பானின் காசுகாய் நகரில் வசிக்கும் 54 வயது மாசாரு மியுராவுக்கு வேலைக்குச் செல்வதே பிடிக்காது. அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி விடுமுறை எடுத்து, வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பார். அதிக நாட்கள் விடுமுறை எடுத்ததாலும் ஓரளவுக்கு மேல் காரணங்களைச் சொல்ல முடியாததாலும் ஒருநாள் வேலைக்குச் செல்லும் வழியில், ரயில் நிலையத்தில் தன்னைத் தானே சிறு கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார். யாரோ ஒருவர் தன்னைக் குத்திவிட்டதாகக் காவல்துறையிடம் புகார் அளித்தார். சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தார். சில நாட்களுக்குப் பிறகு பிரச்சினை உருவானது. காவல்துறையிலிருந்து விசாரணைக்கு வந்தனர். கத்தியால் குத்திய நபர் குறித்து கேள்விகள் கேட்டனர். மாசாரு மியுராவுக்குச் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர் ஜோடித்த சம்பவம் காவல்துறைக்குச் சந்தேகத்தை உருவாக்கியது. விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, ரயில் நிலையம் அருகே ஒரு கத்தியைக் கண்டுபிடித்தனர். ரயில் நிலையத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் மாசாரு மியுரா ஒரு கத்தியுடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி, மறைவான இடத்துக்குச் சென்றது பதிவாகியிருந்தது. காவலர்கள் மாசாரு மியுரா தன்னைத்தானே குத்திக்கொண்ட குற்றத்துக்காக அவரைக் கைது செய்தனர். “நான் வேலைக்குப் போகாமல் சில நாட்கள் வீட்டில் இருப்பதற்காகத்தான் கத்தியால் குத்திக்கொண்டேன். அது இவ்வளவு பெரிய பிரச்சினையில் மாட்டிவிட்டுவிட்டதே?” என்கிறார் மாசாரு மியுரா.

அடப்பாவி, விளையாட்டு வினையாகிவிட்டதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x