Published : 23 Aug 2016 09:29 AM
Last Updated : 23 Aug 2016 09:29 AM

உலக மசாலா: ஓவியப்படம்!

இந்தப் படத்தைப் பார்க்கும் எவரும் ப்ரான்சிஸ்கா ட்ர்ப்டோவ் மிகச் சிறந்த புகைப்படக்காரர் என்பார்கள். விலங்குகளின் முடி, கண்கள் என்று ஒவ்வொரு நுட்பமான விஷயம் அத்தனை அழகாகப் படத்தில் தெரிகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரான் சிஸ்கா புகைப்படக்காரர் அல்ல, ஓவியர். இந்தப் படமும் அவர் வரைந்த ஓவியமே! ‘ஆரம்பத்தில் வனவிலங்குகளின் படங்களை போட்டோஷாப் மூலம்தான் வரையக் கற்றுக்கொண்டேன். அதில் இருந்து வெளிச்சத்தையும் நிழலையும் எப்படி வரைவது என்று அறிந்துகொண்டேன். பிறகு காகிதங்களிலும் கேன்வாஸிலும் கைகளால் வரைய ஆரம்பித்தேன்.

இன்று இந்தக் கலை என் வசமாகிவிட்டது. ஒரு படத்தை முடிக்க சில மணி நேரங்களில் இருந்து ஒரு மாதம் வரை கூட ஆகும். அந்தந்தப் படங்களின் தன்மைதான் அதைத் தீர்மானிக்கிறது. ஓவியத்துக்காக நான் எங்கும் பயிற்சி பெறவில்லை. என் விருப்பத்தால், தேடித் தேடிப் படித்து, பயிற்சிகள் செய்து, என்னை ஓவியராக மாற்றிக்கொண்டேன். இன்றும் எந்தவிதத்தில் என் ஓவியத் திறமையை முன்னேற்றிக்கொள்ளலாம் என்றே சிந்திக்கிறேன்’ என்கிறார் ப்ரான்சிஸ்கா.

ஓவியங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!

அரிசோனாவில் வசிக்கிறார் 31 வயது பாக்வாலே பாட் ப்ரோக்கோ, 274.5 கிலோ எடையுடன் இருந்தார். ஒவ்வொரு வேளையும் தனக்குத் தேவையான உணவை நடந்து சென்று, வால்மார்ட்டில் வாங்கி வந்து சாப்பிட ஆரம்பித்தார். 3 ஆண்டுகளில் 134 கிலோ எடையைக் குறைத்துவிட்டார். ‘‘என்னைப் பரிசோதித்த மருத்துவர் உயர் ரத்த அழுத்தமும் கொழுப்பும் அதிகம் இருப்பதாக எச்சரித்தார். இப்படியே என் எடை அதிகரித்தால் என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை. என் உருவத்தைப் படம் எடுத்துப் பார்த்தேன். என் தொப்பை தொடையைத் தொட்டுக்கொண்டிருந்தது.

என் மார்பு கீழே இறங்கி இருந்தது. எப்படியும் எடை குறைத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். ஜிம் கருவிகளில் என் உருவம் நுழையாது. எனக்கு எப்போதெல்லாம் பசி எடுக்கிறதோ, அப்போதெல்லாம் 1 மைல் தூரத்தில் இருக்கும் வால்மார்ட் கடைகளுக்குச் சென்று வேண்டியதை வாங்கிவந்து, சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு 3 வேளை இப்படிச் சென்றால் 6 மைல் தூரத்துக்கு நடந்து விடலாம். தொடர்ந்து 6 மைல்கள் நடப்பதை விட, இது சுவாரசியமாகவும் இருந்தது. இரண்டே ஆண்டுகளில் 91 கிலோ எடை குறைந்தேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்போது என்னால் ஜிம் கருவிகளில் ஏறி, உடற்பயிற்சி செய்ய முடிந்தது. வால்மார்ட் நடக்கும் தூரத்தை ட்ரட்மில்லில் நடந்தேன். என்னுடைய உணவுப் பழக்கத்தையும் மாற்றினேன். காய்கறிகள், இறைச்சி, ஓட்ஸ் போன்றவற்றையும் முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்துக்கொண்டேன்.

பால் எடையை அதிகரித்தது. அதனால் பாலை என் உணவில் இருந்து நீக்கிவிட்டேன். ‘பேட் பாட்’ என்று என்னைக் கூப்பிட்டவர்கள் இன்று, ‘பாசிபிள் பாட்’ என்று அழைக்கிறார்கள். தொங்கிக்கொண்டிருந்த அளவுக்கு அதிகமான 13 கிலோ தோலை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிட்டேன். இதோ ஒரு பாடிபில்டராக மாறிவிட்டேன்’’ என்கிறார் பாட் ப்ராக்கோ.

நடந்து நடந்தே எடை குறைத்த மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x