Published : 30 May 2017 10:17 AM
Last Updated : 30 May 2017 10:17 AM

உலக மசாலா: மனித உடலுக்குள் மைக்ரோசிப் வரமா, சாபமா?

ஸ்வீடனைச் சேர்ந்த எபிசென்டர் என்ற தொழில்நுட்ப நிறுவனம், தன் ஊழியர்களின் கைகளில் மைக்ரோசிப்பை பொருத்தி வருகிறது. 3000 பேர் வேலை செய்யும் நிறுவனத்தில் இதுவரை, 150 பேருக்கு மைக்ரோசிப்பைப் பொருத்திவிட்டது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தாலும் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார்கள் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ஊழியர்கள். “சிறிய அரிசி அளவுள்ள சிப்பை எங்கள் கைகளில் பொருத்தியிருக்கிறார்கள். சில நாடுகளில் செல்லப் பிராணிகளின் உடலில் இதுபோன்ற மைக்ரோசிப்பை பொருத்துவார்கள். அது எங்கே போகிறது, வருகிறது என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். அதேபோல தான் நாங்கள் வேலை செய்கிறோமோ, கேண்டீனில் இருக்கிறோமோ, இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டோமா என்றெல்லாம் இந்த மைக்ரோசிப் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். கண்காணிப்பு கேமராவை விட இது இன்னும் துல்லியமாக ஊழியர்களைக் கண்காணிக்கிறது” என்கிறார் ஓர் ஊழியர். “நம் வாழ்க்கையை எளிதாக்குவதற்குதான் தொழில்நுட்பம். மைக்ரோசிப் பொருத்தப்பட்டவர்கள் தனியாக அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வரவேண்டியதில்லை. கேண்டீனில் கூப்பன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அலுவலகக் கதவு தானாகவே திறந்துகொள்ளும். இப்படி வேலை செய்யும் இடத்தில் எல்லாவற்றையும் எளிதாக்கி விடுகிறது இந்த மைக்ரோசிப். அரிசி அளவில் இருக்கும் மைக்ரோசிப்பை எளிதாக உடலுக்குள் வலியின்றி, ரத்தமின்றி நுழைத்துவிட முடியும். எதிர்காலத்தில் கடன் அட்டை, சாவிகளுக்குப் பதிலாக மைரக்ரோசிப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. காலப்போக்கில் உடலுக்குள் வைக்கக்கூடிய மைக்ரோசிப் தவிர்க்க இயலாததாக மாறிவிடும்” என்கிறார் எபிசென்டர் நிறுவனர்களில் ஒருவரான பாட்ரிக் மெஸ்டர்டன்.

மனித உடலுக்குள் மைக்ரோசிப் வரமா, சாபமா?

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 20 வயது மாடல் ராசின் ப்ரெகுன்டா, கடந்த மாதம் புற்றுநோயால் இறந்து போனார். தான் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக, தன் தங்கை ரோசிலினிடம், “இந்தப் புற்றுநோய் என் உடலை மோசமாகப் பாதித்துவிட்டது. இனி உயிர் பிழைக்க மாட்டேன். நான் இதுவரை எப்படி அழகாகப் பார்க்கப்பட்டேனோ, அதேபோல அழகாகவே மரணத்தைச் சந்திக்க விரும்புகிறேன். என் மரணத்துக்குப் பிறகு என் பெயரைச் சொல்லும்போது அழகான உருவம் தான் மனதில் வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். “என் அக்கா மிகவும் துணிச்சலாகப் புற்றுநோயை எதிர்கொண்டார். அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தேன். அதேபோல ராசின் இறந்தவுடன், அவரது பிரத்யேக ஒப்பனைக் கலைஞரை வரவழைத்து ஒப்பனை செய்தோம். இறுதி நேரத்தில் வலியை அனுபவித்தாலும் ராசினின் முகம் மெல்லிய புன்னகையுடன் இருந்ததைக் கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர். இறுதிச் சடங்குகள் அவரின் விருப்பப்படி நடத்தப்பட்டது. அத்தனை விஷயங்களையும் புகைப்படங்கள் எடுத்து, ராசினின் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன். பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்” என்கிறார் ரோசிலின்.

அழகான இறுதி மரியாதை!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x