Last Updated : 15 Jun, 2016 12:05 PM

 

Published : 15 Jun 2016 12:05 PM
Last Updated : 15 Jun 2016 12:05 PM

தீவிரவாதி ஒமர் மடீனைவிட என் மீதே ஒபாமாவுக்கு கோபம் அதிகம்: டிரம்ப் சர்ச்சைப் பேச்சு

ஆர்லாண்டோ தீவிரவாதி மீதான கோபத்தைவிட ஒபாமாவுக்கு தன் மீதே அதிக கோபம் இருப்பதாக அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ப்ளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஐ.எஸ். ஆதரவாளர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த டொனால்ட் டிரம்ப், "நமக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சிக்கல் இருக்கிறது" எனக் கூறியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிபர் ஒபாமா. முஸ்லிம் விரோத கொள்கையை டிரம்ப் கடைபிடிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் பேசும்போது, "இஸ்லாம் அடிப்படைவாதம் என்ற சொற்றொடரே அரசியல். அது ஒரு கொள்கை அல்ல. அமெரிக்காவுக்குள் முஸ்லிம்களை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார். இது ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையே வன்முறையாளர்களாக சித்தரிக்கும் முயற்சி.

டிரம்ப் கூறுவதுபோல் முஸ்லிம் - அமெரிக்கர்களை நாம் வித்தியாசமாக நடத்த வேண்டுமா. அவர்களுடையை மத நம்பிக்கையை வைத்து மட்டுமே அவர்களை புறக்கணிக்க வேண்டுமா? டிரம்ப் சொல்வதுபோல் நடந்தால் முஸ்லிம் - அமெரிக்கர்கள் இந்த அரசு அவர்களுக்கு துரோகம் செய்வதாக நினைக்கமாட்டார்களா?

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு விரோதமாக நாம் எப்படி நடப்பது. நமது அரசு நம் சக குடிமக்களையே பாகுபாட்டோடு நடத்திய அவமான சம்பவங்கள் நம் வரலாற்றில் இருக்கிறது. அந்த பழங்கதை தொடரக்கூடாது" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒபாமாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள டிரம்ப், "ஆர்லாண்டோ தீவிரவாதி மீதான கோபத்தைவிட ஒபாமாவுக்கு என் மீதே அதிக கோபம் இருக்கிறது. இதை நான் மட்டுமே சொல்லவில்லை. மக்கள் பலரும் சொல்கின்றனர்.

ஒபாமா ஒரு சிறந்த அதிபராக செயல்பட்டிருந்தால் என்னைவிட யாரும் அதில் மகிழ்ச்சி பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அவர் மோசமான அதிபராக செயல்பட்டிருக்கிறார். நமது நாட்டில் தற்போது நடக்கும் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் கேடு விளைவிப்பவை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x