Published : 12 Oct 2014 02:01 PM
Last Updated : 12 Oct 2014 02:01 PM

உலக மசாலா: தலையில் குத்திய டாட்டூவுக்கு கைது

பான் ஹுன் லேக் தாய்லாந்தில் உள்ள ஸ்க்ராப் மெட்டல் கம்பெனி. போல்ட், நட், ஸ்க்ரூ போன்ற பொருள்களுடன் உபயோகமற்ற வாகனங்களின் உதிரி பாகங்களை வைத்து மிகப் பிரபலமான உருவங்களை உருவாக்கி வருகிறது. இவர்களின் சமீபத்திய படைப்பு ஹல்க். இவர்கள் உருவாக்கிய உருவங்களிலேயே ஹல்க்தான் மிகச் சிறந்த படைப்பாகச் சொல்கிறார்கள். ஏலியன், ஸ்டார் வார்ஸ், யானை, டைனோசார், ஒட்டகச்சிவிங்கி, டிராகன் போன்ற உருவங்களை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாமே அதி அற்புதமான படைப்புகள்!

படத்தில் பார்க்கும் ஹல்க்கை விட இந்த போல்ட், நட் ஹல்க் ரொம்ப சூப்பரு!

38 வயது ராங்ஃபெங் சீனாவில் உள்ள ஷென்யாங் ஜியு ஜியு லி ஃபெங் குழுவின் தலைவராக இருக்கிறார். மிகப் பெரும் செல்வந்தர். அவருடைய கடந்த காலம் மிகவும் துயரமானது. 17 வயதில் வீட்டில் நிலவிய வறுமையால், தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் இருவருடன் ஏதாவது வேலை கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தபோது, டாய் ஸிங்ஃபென் வந்தார்.

அவரும் அவருடைய கணவரும் ஒரு நூடுல்ஸ் கடை நடத்தி வந்தனர். மூவருக்கும் உணவும், தங்கும் இடமும் அளித்தார். ரயிலுக்குப் பணம் கொடுத்து, வேறொரு நகரில் வேலை தேடிக்கொள்ளச் சொன்னார். அங்கிருந்து கிளம்பி வந்த ராங்ஃபெங், இருபதாண்டுகளில் கோடீஸ்வரராக மாறினார்! டாயின் நல்ல உள்ளத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர், நீண்ட தேடுதலுக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்தார். ஒரு கோடி ரூபாயை அன்பளிப்பாக அளித்தார்! ராங்ஃபெங்கின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்த டாய், பணிவுடன் பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்!

உங்க ரெண்டு பேரின் அன்பும் அடடா! ஆனா ராங்ஃபெங்கை விட நீங்கதான் நிஜமான கோடீஸ்வரர் டாய்!

அண்டார்டிகாவில் உள்ள கடல் பனிப் பரப்பு இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது. 19 மைல் நீளத்துக்கு படந்திருக்கும் இந்தப் பனிப் பரப்பைப் பார்த்து, பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக துருவப் பிரதேசங்களுக்குப் பாதிப்பில்லை என்று சொல்லி விட முடியாது என்கிறது நாசா. துருவப் பிரதேசங்களில் உள்ள நிலப் பனி உருகுவதால், கடல் பனியின் அளவு அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பனி உருகினாலும் உலர்ந்தாலும் ஆபத்துதான் போல...

ஃப்ளோரிடாவில் விக்டர் தாம்சன் தலையில் குத்திய டாட்டூவுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே போதைப் பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர். புகழ்பெற்ற கால்பந்து வீரர் டாம் பிராடியின் பிரத்யேக ஹெல்மெட்டை, தன் தலையில் டாட்டூவாக வரைந்துகொண்டிருக்கிறார். மேலும் ராப் க்ரோன்கோவ்ஸ்கி, வெஸ் வெல்கர், ராண்டி மோஸ் போன்ற விளையாட்டு வீரர்களின் கையெழுத்துகளும் அச்சு அசலாக தலையில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு விதமாக தாம்சனைப் புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அபராதம் விதித்து அனுப்பியிருக்கிறது காவல்துறை.

ஏம்ப்பா தாம்சன், தலையில் வரைவதற்கு உனக்கு வேற விஷயங்களே இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x