Published : 30 Jul 2016 11:03 AM
Last Updated : 30 Jul 2016 11:03 AM

உலக மசாலா: பாராசூட் இல்லாமலே பறக்கும் ஸ்கை ட்ரைவிங் வீரர்!

தொழில்முறை ஸ்கைடைவராக இருக்கிறார் 42 வயது லூக் ஐகின்ஸ். 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட், விங்சூட் இல்லாமல் பறந்து வந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார்! இதுவரை யாருமே இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டதில்லை. 12 வயதில் ஸ்கைடைவ் செய்ய ஆரம்பித்த லூக், தன் வாழ்நாளில் 18 ஆயிரம் முறை பாராசூட் மூலம் ஸ்கைடைவ் செய்திருக்கிறார். மிகக் கடினமான, ஆபத்தான ஸ்டண்ட்கள் செய்யும்போது, ஒருவர் கூடவே பாராசூட் உடன் பின்தொடர்வார். இப்படி 30 தடவை ஆபத்தான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் லூக். ஆனால் இந்த முறை தனியாக குதிக்க இருக்கிறார். ஒரு விளையாட்டு மைதானத்தில் பெரிய வலையைக் கட்டியிருக்கின்றனர்.

தரையில் இறங்காமல், வலையில் குதித்து உயிர் தப்ப வேண்டும். ‘‘30 வருடங்களாக ஏராளமான சாதனைகளை நிகழ்த்திவிட்டேன். இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பாராசூட் இன்றி குதிக்கும் முயற்சி தோன்றியது. ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும் மரணம் நிச்சயம். என் மனைவியையும் மகனையும் சம்மதிக்க வைத்திருக்கிறேன். தினமும் 1000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துப் பயிற்சி எடுத்தேன். 34 முறை குதித்து, பயிற்சி எடுத்த பிறகு இனி தவறு நிகழ வாய்ப்பில்லை என்று தோன்றியது. எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.

எனக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை. 25 ஆயிரம் அடியில் இருந்து பார்க்கும்போது மைதானம் ஒரு புள்ளியாகத் தெரிந்தது. கொஞ்சம் தவறவிட்டாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அதனால் மைதானத்தில் விளக்குகளை ஒளிர வைத்திருக்கிறோம். அந்த விளக்கு வெளிச்சத்தை வைத்துச் சரியாக வலையில் இறங்கப் போகிறேன்’’ என்கிறார் லூக் ஐகின்ஸ்.

பத்திரமாகச் சாதனை படைக்க வாழ்த்துகள் லூக்!

ரஷ்யாவில் உள்ள ஆல்வி கேஸ் ஸ்டேஷன் வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. பெண்களுக்கான நீச்சல் உடையிலும் குதிகால் உயரமான செருப்புகளுடனும் கேஸ் ஸ்டேஷனுக்கு வருபவர்களுக்கு முழு டேங்க் கேஸ் இலவசம். ஆரம்பத்தில் இந்த அறிவிப்பைக் கண்டவர்கள், மோசமான விளம்பர உத்தி என்றனர். ஆனால் நீச்சலுடையில் ஏராளமான பெண்கள் கேஸ் ஸ்டேஷனை நோக்கி வர ஆரம்பித்துவிட்டனர். இதைப் பார்த்த ஆண்களில் சிலரும் பெண்களின் நீச்சலுடையை அணிந்துகொண்டு, கேஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.

‘‘ஒரு டேங்க் கேஸ் ஒரு வாரத்துக்குத் தாராளமாக வரும். 5 நிமிடங்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக, இலவசமாகக் கிடைக்கும் ஒரு டேங்க் கேஸை இழக்க நான் விரும்பவில்லை’’ என்கிறார் ஓர் ஆண் வாடிக்கையாளர். ‘‘ஜூலை 21 அன்று இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம். வயது, பாலினம் எதுவும் குறிப்பிடாததால் ஆண்கள், முதிய பெண்கள், குழந்தைகள் நீச்சல் உடைகளுடன் வர ஆரம்பித்துவிட்டனர். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எப்பொழுதும் வரிசையில் மக்கள் இருந்துகொண்டே இருக்கின்றனர்’’ என்கிறார் கேஸ் ஸ்டேஷன் நிர்வாகி.

இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் அவசியமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x