Last Updated : 09 May, 2017 09:33 AM

 

Published : 09 May 2017 09:33 AM
Last Updated : 09 May 2017 09:33 AM

வாழ்க்கைக்கான நெடும் பயணத்தில் நெடுந்தீவு

எல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் சின்னஞ்சிறிய தீவு நெடுந்தீவு.

யாழ்ப்பாணத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பூங்குடுதீவில் இருந்து நெடுந்தீவுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். பாக் ஜலசந்தியில் அமைந்திருக் கும் இந்த தீவில் சுமார் 4,000 பேர் வாழ்கிறார்கள்.

‘‘காலை 7 மணிக்கு வந்தால், இங்கிருந்து நான் உங்களுக்கு ராமேஸ்வரத்தை காட்டுவேன். தெளிவாகத் தெரியும்’’ என்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், ஆட்டோ ஓட்டுநருமான சுப்ரமணியம் நடராசா. நாம் அங்கு சென்றபோது உச்சி வெயில் தகதகத்து கொண்டிருந்தது. கடல் நீரில் சூரிய கதிர்கள் வெள்ளிப் போல பிரதிபலித்ததால் ராமேஸ்வரத்தை மட்டுமல்ல, அங்கிருந்து வேறு எதையுமே நம்மால் பார்க்க முடியவில்லை.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த சமயத்தில், 1990-களுக்கு முன்பாக இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங் கள் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்திருக்கின்றன. அவர்களில் பலர் கடந்த 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் திரும்பி வந்தனர். எஞ்சியவர்கள் 2009-ல் போர் முடிந்த பிறகு வந்து சேர்ந்தனர்.

நம்மிடம் பேசிய நடராசாவும், சில ஆண்டுகள் தமிழகத்தின் திருச்சியில் வாழ்ந்தவர் தான். நெடுந்தீவு தனது அத்தியாவசிய பொருட்களுக்கு யாழ்ப்பாணத் தையே நம்பி இருக்கிறது. அங்கிருந்து தான் அரிசி, பருப்பு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வந்து சேருகிறது.

இதனால் நெடுந்தீவில் அனைத்து பொருட்களின் விலை யும் சற்று அதிகம் என்கிறார் நடராசா. ‘‘யாழ்ப்பாணத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50 என்றால், இங்கு ரூ.59-க்கு தான் வாங்க முடியும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் மக்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்குச் சென்று வர அண்மையில் ‘நெடுந்தாரகை’ என்ற மிகப் பெரிய விசை படகு சேவையை இலங்கை அரசு அறிமுகம் செய்தது. இது தவிர சொற்ப அளவிலேயே படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதனால் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அனைத்து படகுகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

மீன்பிடி மற்றும் பனை மர கள் இறக்குவது தான் இங்கு முக்கிய தொழிலாக இருக்கிறது. எனினும் தமிழக மீனவர்களால், மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிப்படைவதாக நெடுந்தீவுவாசி கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் பனங்கள் விற்பனையும் மந்தமாக இருப்பதாக தெரிவிக் கின்றனர். இதனால் பெரும்பாலான இளைஞர்கள் பிழைப்புக்காக அன்றாடம் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர்.

போர் முடிந்து அமைதி திரும்பி னாலும் நெடுந்தீவு மக்களின் துயரங்கள் என்னவென்பதை முதல் பயணத்திலேயே சொல்லி விட முடியாது. எனினும் நீண்ட காலமாக இந்த மக்கள் புறக் கணிக்கப்படுகிறார்கள் என்பது மட்டும் தீவின் மூலை முடுக் கெல்லாம் அப்பட்டமாக எதிரொ லித்துக் கொண்டே இருக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x