Published : 29 Sep 2018 04:31 PM
Last Updated : 29 Sep 2018 04:31 PM

நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் நீதிபதி கவனாக் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடி ஓய்வு பெற்றதால் புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை நியமிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.

இந்த நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த நிலையில், நீதிபதி பிரெட் கவனாக் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். 36 ஆண்டுகளுக்கு முன்பு கவானக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கிறிஸ்டின் பிளாசே என்ற பெண் புகார் தெரிவித்தார்.

இதுபோலவே, ரெமிரெஸ் என்பவரும், கவனாக் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்து வந்தார். பாலியல் பலாத்காரம் செய்திருந்தால் அவர்கள் இருவரும் அப்போதே ஏன் புகார் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார்.

பாலியல் புகாருக்கு ஆளான நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டரம்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து இந்திய வம்சாவளி நடிகையான பத்மலட்சுமி உட்பட பலரும் வேதனை தெரிவித்தனர். தான் 16 வயதில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், ஆனால் அன்றைய சூழலில் அதுபற்றி புகார் கூற முடியாத சூழல் இருந்ததாகவும் பத்மலட்சுமி கூறினார்.

இதைத் தொடர்ந்து கவனாக் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. செனட் குழு ஏற்கெனவே கவனாக்கிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், பிரெட் கவனாக் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க எப்பிஐ விசாரணைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் குறித்து எப்பிஐ அதிகாரிகள் விசாரித்த ஒரு வாரகாலத்துக்குள் அறிக்கை அளிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x