Published : 20 Jun 2019 06:10 PM
Last Updated : 20 Jun 2019 06:10 PM

முகமது மோர்சியின் மரணம் குறித்த எர்டோகன் கருத்துக்கு எகிப்து கண்டனம்

எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் மரணம் இயற்கையானது அல்ல என்று கூறிய துருக்கி அதிபர் எர்டோகனுக்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.

முகம்மது மோர்சியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல, திட்டமிட்ட கொலை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் குற்றம் சாட்டி வந்த நிலையில் மோர்சியின் மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

இதற்கிடையில் மோர்சியின்  இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவரது நெருங்கிய நண்பரான துருக்கி அதிபர் எர்டோகன், ”இந்த மரணத்தை இயற்கை மரணமாக நான் கருதவில்லை. அவர் நீதிமன்றத்தில் 20 நிமிடம் உயிருக்குப் போராடி இருக்கிறார். அவருக்கு ஏன் எகிப்து அதிகாரிகள் உதவவில்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் எர்டோகன் குற்றச்சாட்டு பொறுப்பற்ற தன்மை என்று எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, எகிப்தில் நீண்டகாலம் அதிபராக இருந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக், ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த  முகம்மது மோர்சி அதிபரானார். அதிபர் பதவியில் ஓராண்டு மட்டுமே இருந்த முகமது மோர்சிக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது.

கலவரம் வலுத்த நிலையில் மோர்சிக்கு எதிராக அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் அப்தல் பதா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியைப் பதவியை விட்டு நீக்கியதுடன், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கொல்வதற்கு உத்தரவிட்டதாக முகமது மோர்சி மீது வழக்கு தொடரப்பட்டது.

மேலும், மோர்சி மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் கண்ணாடிக் கூண்டில் ஆஜராகி மோர்சி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு அவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x