Published : 03 Sep 2014 10:00 AM
Last Updated : 03 Sep 2014 10:00 AM

அமெரிக்காவில் உயர்கல்வி இந்தியாவில் ஹைதராபாத் முதலிடம்

உயர்கல்வி பயில்வதற்கு அமெரிக்காவுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்திய நகரங்களில் ஹைதராபாத் முதலிடம் வகிக்கிறது. மேலும் உலக அளவில் நான்காமிடம் பெற்றுள்ளது. ப்ரூக்கிங் இன்ஸ்ட்டியூஷன் என்ற ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இதன்படி 2008 முதல் 2012 வரை மும்பை, புதுடெல்லி ஆகிய இரு நகரங்கள் கூட்டாக அனுப்பியதை காட்டிலும் ஹைதராபாத் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. இந்திய நகரங்கள் அளவில் ஹைதராபாத் முதலிடமும் உலக நகரங்கள் அளவில் 4-வது இடமும் பெற்றுள்ளது.

2008 முதல் 2012 வரை எப்-1 விசா மூலம் அமெரிக்கா சென்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு நாடுகளின் 94 நகரங்களைச் சேர்ந்தவர்களாக உள்னர். இதில் சியோல் முதலிடத்தில் உள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் இதைத் தொடர்ந்து ஹைதராபாத், ரியாத் ஆகிய நகரங்கள் 4-வது மற்றும் 5-வது இடத்திலும் உள்ளன.

இந்தக் காலகட்டத்தில் ஹைதராபாத் 26,220 மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. இதற்கடுத்து மும்பை 17,294, சென்னை 9,141, பெங்களூர் 8,835, டெல்லி 8,728 என மாணவர்களை அனுப்பியுள்ளன. அமெரிக்க கல்வி நிலையங்களில் பிரபலம் ஆகாத, அரசால் அங்கீகரிக்கப்படாத சில கல்வி நிறுவனங்களையும் ஹைதராபாத் மாணவர்கள் தேர்வு செய்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு மாறாக மும்பை, டெல்லி, பெங்களூர் மாணவர்கள் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்வு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x