Last Updated : 01 Jun, 2019 09:14 AM

 

Published : 01 Jun 2019 09:14 AM
Last Updated : 01 Jun 2019 09:14 AM

அமெரிக்காவின் வெர்ஜினியா நகரில் அரசு ஊழியர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜினியா கடற்கரைப்பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் கண்மூடித்தனமாக சக பணியாளர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12  பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் படுகாயமடைந்தனர்.

அங்கு வந்த போலீஸார் மீதும் அந்த ஊழியர் துப்பாக்கியால் சுட்டதால் போலீஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த ஊழியர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து வெர்ஜினியா நகர போலீஸ் தலைமை அதிகாரி ஜேம்ஸ் செர்வேரா கூறியதாவது:

வெர்ஜினியா நகரில் உள்ள விர்ஜினியா கடற்கரைப்பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்துக்குள் நேற்று மாலை 4 மணி அளவில், துப்பாக்கியுடன் ஒருவர் உள்ளே சென்றார். திடீரென அங்குபணியில் இருந்த ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக அவர்  வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் அங்கிருந்தவர்கள் மீது குண்டுபாய்ந்து ஏராளமானவர்கள் சரிந்து விழுந்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு வந்து அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்த நபர் போலீஸார் மீதும் துப்பாக்கியால் சுட்டார். இதில் போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் அந்த நபர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிவந்த 12 ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள், போலீஸார் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

வெர்ஜினியா கடற்கரைப் பகுதியில் இதுபோல் நடந்தது இல்லை. அந்த நபர் தன்னுடைய நண்பர்கள், சக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மனரீதியாக அந்த நபர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதுகிறோம்.

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் நடத்த 150-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும் "  இவ்வாறு  போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், சுட்டுக்கொல்லப்பட்ட நபர் வெர்ஜினியா நகராட்சி ஊழியர் என்று மட்டும் தெரிவித்த போலீஸார், அவரின் பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவற்றை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

வெர்ஜினியா ஆளுநர் ரால்ப் நார்தம் கூறுகையில், " இந்த துப்பாக்கிச்சூடு உண்மையில் துயரமானது. எங்களுக்கு இந்த நாள் வேதனையான நாள். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எங்களின் ஆறுதல்களை தெரிவிக்கிறோம். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளோம் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x