Published : 08 Mar 2018 09:29 AM
Last Updated : 08 Mar 2018 09:29 AM

இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு: முகநூல், வாட்ஸ் அப் முடக்கம், இணையதள சேவை துண்டிப்பு

இலங்கையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கண்டி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பவுத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரை, முஸ்லிம் இளைஞர்கள் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டி, மஹியங்கனை, திகன, தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது.

குறிப்பாக மலையகப் பகுதி யான கண்டி கலவர பூமியாக மாறியது. தொடர் வன்முறை சம்பவங்களால் மசூதிகள், கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இதில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அங்கு 5-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கலவரம் பரவுவதைத் தடுக்க அப்பகுதி யில் ராணுவமும் சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டனர். 6-ம் தேதியும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

பள்ளிக்கூடங்கள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பான்மை பவுத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்துவரும் பனிப்போர் இப்போது மீண்டும் பெரிதாகி உள்ளது.

இந்நிலையில், கலவரம் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்க, நேற்று முன்தினம் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. கண்டி மாவட்டத்தில் நேற்று காலையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து, 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப் பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு பயணம் செய் பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட, ஐநா பொதுச் செயலாளர் (அரசியல் விவகாரம்) ஜெப்ரி பெல்ட்மேன் நாளை கொழும்பு வர உள்ளதாக ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x