Published : 09 Mar 2018 09:40 AM
Last Updated : 09 Mar 2018 09:40 AM

இந்திய யானையும் சீன டிராகனும் சண்டையிட்டுக் கொள்ள கூடாது: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து

இந்திய யானையும் சீன டிராகனும் சண்டையிடக்கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிக்கிம் எல்லைப் பகுதியான டோக்லாமில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தபோது இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே 73 நாட்கள் பதற்றம் நீடித்தது. இதேபோல அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் முகமது அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. இந்த முயற்சியை சீனா தொடர்ந்து தடுத்து வருகிறது. இதேபோல அணு மூலப்பொருள் விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கும் சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற பெயரில் வர்த்தக சாலை போக்குவரத்தை புதுப்பித்து வரும் சீனா, ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைத்துள்ளது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை அமலில் உள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர மாநாடு பெய்ஜிங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நிருபர்களிடம் கூறியதாவது:

சில பிரச்சினைகள் இருந்தாலும் சீன, இந்திய உறவு வளர்ந்து வருகிறது. சீனாவின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். அதேநேரம் இந்தியாவுடனான உறவை பேணவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டில் சர்வதேச நிலவரம் மாறி வருகிறது. சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும்.

இந்திய யானையும் சீன டிராகனும் சண்டையிடக்கூடாது, இணைந்து நடனமாட வேண்டும். உறுதியான அரசியல் நம்பிக்கை இருந்தால் இந்திய, சீன நட்புறவு இமயமலையால்கூட தடுக்க முடியாது. இந்தியாவும், சீனாவும் பழங்காலம் முதல் நட்புறவு பாராட்டி வருகின்றன. அதை முன்னெடுத்துச் செல்ல சீனா விரும்புகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x