Published : 17 Mar 2018 08:29 AM
Last Updated : 17 Mar 2018 08:29 AM

சிரியா உள்நாட்டுப் போர் குறித்து ரஷ்யா, ஈரான், துருக்கி பேச்சுவார்த்தை

சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது குறித்து ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தின.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளிக்கின் றன.

ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீத பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போது கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் அதிபர் ஆசாத் படைகள் கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 1,260 பேர் பலியாகி உள்ளனர். 22 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜாரீப், துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லத் ஆகியோர் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிழக்கு கவுட்டா வில் சிக்கியுள்ள மக்களைப் பத்திரமாக வெளியேற்றுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஐ.நா. சபைக்கான சிரியா தூதர் ஸ்டபான் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தின் நிறைவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் கூறியபோது, “சிரியாவில் உள்நாட்டுப் போர் நீடிக்க வேண்டும் என்று சில நாடுகள் விரும்புகின்றன. இதனால் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன. ரஷ்யா, ஈரான், துருக்கி நாடுகள் சிரியாவில் அமைதியை நிலைநாட்ட அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றன. எங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

சிரியாவின் கிழக்கு கவுட்டாவின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் நேற்றும் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x