Published : 09 Mar 2018 09:44 AM
Last Updated : 09 Mar 2018 09:44 AM

இலங்கையில் இனக்கலவரம் பெரிதானதால் பிரதமர் ரணிலிடம் இருந்த போலீஸ் துறை பறிப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா நடவடிக்கை

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் இருந்த போலீஸ் துறையை பறித்து வேறு ஒருவருக்கு வழங்கி உள் ளார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா.

இலங்கை கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அதன்பின், புத்த மதத்தினர் தாக்குதல் நடத்தியதில் முஸ்லிம்கள் 2 பேர் இறந்தனர். இதையடுத்து பெரும்பான்மை சிங்கள புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையில் இனக்கலவரம் ஏற்பட்டது.

கண்டி மாவட்டத்தில் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இணையதள சேவை முடக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு 3 நாட்களாக தொடர்ந்து நீடிக்கப்பட்டது. இதற்கிடையில், இலங்கையில் 10 நாட்கள் எமர்ஜென்சியை அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. அதன்பிறகும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தன. இந்தச் சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்புத் துறை (போலீஸ்) அமைச்சர் பதவியை அதிபர் சிறிசேனா நேற்று பறித்தார்.

இதையடுத்து விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த அரசியல் தலைவர் ரஞ்ஞித் மதுமா பண்டாரா, போலீஸ் துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். போலீஸ் துறை பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வழங்கப்பட்டது. அதற்குள் இனக்கலவரம் மீண்டும் ஏற்பட்டதால் அந்த பொறுப்பு தற்போது பறிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையில் மக்களின் வேண்டுகோளை ஏற்று கண்டி மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் அவசர அவசரமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர். பின்னர் மாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x