Last Updated : 12 Mar, 2018 03:32 PM

 

Published : 12 Mar 2018 03:32 PM
Last Updated : 12 Mar 2018 03:32 PM

நேபாள விமான விபத்தில் 38 பயணிகள் பலி ; 23 பேர் காயம்

 67  பயணிகளுடன் பயணித்த யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் நேபாளம் தலைநகர் காத்மாண்ட் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 38 பயணிகள் பலியானார்கள்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற விவரம் இன்றும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறிய அரசு செய்தித் தொடர்பாளர் ”நாங்கள் இறந்த சில உடல்களை நொறுங்கிய விமானத்திலிருந்து மீட்டிருக்கிறோம்”  என்று கூறினார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்ட் நகருக்கு வங்க தேசத்தைச் சேர்ந்த யு.எஸ். பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, யு.எஸ்.பங்களா நிறுவனத்துக்கு சொந்தமான பிஎஸ்-211 என்ற விமானம் இன்று நண்பகல் 2.30 மணி அளவில் காத்மாண்ட் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, அதன் அருகே இருக்கும் கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 67 பேர் வரை பயணம் செய்தனர் என்று காத்மாண்ட் போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது. விமானம் விழுந்த இடத்தில் இருந்து கரும்புகை வந்தவாறு இருக்கிறது.

இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர், பாதுகாப்புப் படையினர், போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 8 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளன.

இதுவரை 23 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக காத்மாண்ட் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. 38 பேர் பலியானதாக தகவல்கள் கிடைத்துள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x