Published : 12 Mar 2018 04:05 PM
Last Updated : 12 Mar 2018 04:05 PM

ராணுவ தளங்களாக மாற்றப்பட்ட ரோஹிங்கியாக்களின் வசிப்பிடங்களும், வழிபாட்டுத் தலங்களும்

  மியான்மரிலிருந்து 7,00,000 ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேறிய நிலையில் அவர்களது இருப்பிடங்களும், வழிபாட்டுத் தலங்களும் ராணுவ தளங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி கூறியுள்ளது.

மியான்மரின் ரெக்கைன் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசித்தனர். அந்தப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். அதில் போலீஸார் சிலர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மியான்மர் ராணுவத்தினரும் புத்த மதத்தினரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

அதனால் மியான்மரில் இருந்து தப்பி அண்டை நாடான வங்க தேசத்துக்குள் அகதிகளாகப் புகுந்தனர். சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேச முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மர் - வங்கதேச அரசுக்கு இடையே கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 7.50 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்களை 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இருப்பிடங்களையும், அவர்களது வழிபாட்டுத் தலங்களையும் ராணுவ தளங்களாக மியான்மர் அரசு மாற்றியுள்ளதாக ஆம்னெஸ்டி (சர்வதேச பொது மன்னிப்பு சபை) கூறியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை ஆம்னெஸ்டி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதுபற்றி ஆம்னெஸ்டி தரப்பில், ''ராக்கைனில் ரோஹிங்கியாக்கள் நிலம் ராணுவத்திடம் சென்றுள்ளதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கு புதிய ராணுவ தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சாட்டிலைட் படங்களும் கிடைத்துள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x