Published : 23 Mar 2018 08:32 AM
Last Updated : 23 Mar 2018 08:32 AM

உலக மசாலா: இப்படியும் டாட்டூ போடலாமா?

போ

லந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது ஆடம் கர்லிகேலின் இன்ஸ்டாகிராம் படங்களைப் பார்ப்பவர்கள் ஆச்சரியமடைகிறார்கள். படங்களை நெகடிவ் ஃபில்டர் போட்டு எடுத்திருக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் ஆடம் படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் அப்படியேதான் இருக்கிறார்! முகம், உடல், கண் உட்பட அனைத்து இடங்களிலும் அடர் சாம்பல் வண்ணத்தில் டாட்டூ போட்டுக்கொண்டிருக்கிறார். தலை, புருவம், இமை முடி களுக்கு டை அடித்து வெள்ளையாக மாற்றிவிட்டார். “நான் இருபது ஆண்டுகளாக டாட்டூ பயன்படுத்தி வருகிறேன். ஆரம்பத்தில் சில எழுத்துகளைத்தான் எழுதி வைத்திருந்தேன். காலம் செல்லச் செல்ல டாட்டூ மீது ஆர்வம் அதிகரித்துவிட்டது. இன்று என் உடலில் 90% டாட்டூவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கூட டாட்டூவை நிறுத்தும் எண்ணம் வரவில்லை. 99% வரை டாட்டூ போடும் திட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய கடினமான காலகட்டங்களை இந்த டாட்டூகளால்தான் எளிதாகக் கடந்து வந்திருக்கிறேன். 22 வயதில் பெருங்குடலில் புற்றுநோய் வந்துவிட்டது. நோயிலிருந்து மீளவும் கடினமான சிகிச்சையிலிருந்து வெளிவரவும் எனக்குத் துணையாக நின்றது டாட்டூதான். என்னுடைய இந்த டாட்டூ விருப்பத்தை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனக்கு மன அழுத்தம், சாப்பிடுவதில் குறைபாடு, தற்கொலை எண்ணம் போன்றவையும் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து என்னை மீட்டெடுத்ததும் டாட்டூகள்தான்” என்கிறார் ஆடம்.

மிரட்டும் தனித்துவம்!

பி

ரிட்டனின் வில்ட்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் அன்தியா ரிங். இவர் கடந்த 1937-ம் ஆண்டு ஒரு ப்ளாக்பெர்ரி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டார். 9 மாதக் குழந்தையான அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். குழந்தையின் பெற்றோர் யார் என்று நாடு முழுவதும் தேடியது அரசாங்கம். யாரும் குழந்தையைத் தேடி வராததால், 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு குடும்பத்திடம் தத்து கொடுக்கப்பட்டது. 25 வயதில் ப்ளாக்பெர்ரி தோட்டத்திலிருந்து தான் கண்டெடுக்கப்பட்ட விஷயம் இவருக்குத் தெரியவந்தது. உடனே தன் பெற்றோரைத் தேட முடிவெடுத்தார். 35 ஆண்டுகள் தீவிரமாகத் தேடியதில் லீனா ஓ டோன்னெல் இவரது அம்மாவாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1945-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு 4 குழந்தைகள் இருந்தனர். லீனா உயிருடன் இல்லாததால் மகன்களில் ஒருவரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் லீனா தன்னுடைய அம்மா யார் என்று அறிந்துகொண்டார் அன்தியா. அடுத்தது அப்பாவைத் தேடும் பணி ஆரம்பித்தது. அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர்தான் இவரது அப்பாவாக இருக்கமுடியும் என்ற முடிவுக்கு வந்தனர். ஒரு குடும்பத்தையும் கண்டுபிடித்தனர். 6 மகன்கள் இருந்த அந்தக் குடும்பத்தில் அவரது தந்தை ஏற்கெனவே மறைந்துவிட்டார் என்ற விவரம் அறிந்தனர். அன்தியாவுக்காக ஒரு மகன் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு பாட்ரிக் கோய்ன் எழுதிய கடிதத்தில் இருந்த தபால் தலையை எடுத்தனர். எச்சில் தடவி ஒட்டிய தபால் தலையிலிருந்தும் அவரது மகனின் எச்சிலில் இருந்தும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் அன்தியாவுடன் ஒத்துப்போயின. 81 வயதான இவர், தன்னுடைய அப்பா, அம்மா யார் என்ற உண்மையை அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால் ஏன் கைகளைக் கட்டி தனியாக விட்டனர் என்ற கேள்விக்கு மட்டும் விடை இன்னும் தெரியவில்லை.

பெற்றோரைத் தேடிய ஒரு பெண்ணின் போராட்டம் ஆச்சரியம் அளிக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x