Published : 17 Mar 2018 08:28 AM
Last Updated : 17 Mar 2018 08:28 AM

உலக மசாலா: நாய்க்கு தங்க ஆடை

ங்கள் செல்லப் பிராணியை எவ்வளவு தூரம் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதற்காகவே உலகின் விலை உயர்ந்த ஆடையை உருவாக்கியதாகச் சொல்கின்றன இரண்டு நிறுவனங்கள். 24 கேரட் தங்கத்தில் வைரங்கள் பதித்த நாய்க்கான உடையை உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றன டாகி ஆர்மர், வெரிஃபர்ஸ்ட்டு.காம் நிறுவனங்கள். தங்கத்தால் துணி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 விலை மதிப்புமிக்க வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆடையின் விலை சுமார் 89 லட்சம் ரூபாய். தங்க ஆடையை நாய் அணிந்துகொண்டால், பூச்சிகளால் கடிக்க முடியாது. கத்தியால் கூட காயம் ஏற்படுத்திவிட முடியாது. இரும்பை விட 15 மடங்கு இந்த ஆடை உறுதியானது. தங்க ஆடையைத் தங்கள் நாய்க்கு வாங்குவதற்குப் பலரும் ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

பணத்தைச் செலவு செய்ய வழிகளா இல்லை?

ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிராஜக்ட் மேனேஜராகப் பணி புரிந்து வருகிறார் 30 வயது ஆஷ்லே மாக்ஸ்வெல். பெண்கள் அணியும் 6 அங்குல உயரம் உள்ள காலணிகளை விரும்பி அணிந்துகொள்கிறார். 9 ஜோடி காலணிகளில் 4 ஜோடி காலணிகள் பெண்கள் அணியக்கூடியவை. கோட், சூட் அணிந்து குதிகால் உயரமான காலணிகளை அணிந்தபடி அலுவலகத்துக்குச் சென்று வருகிறார்.

“கடந்த ஆண்டு ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் பிரான்ஸைச் சேர்ந்த ஆண் நடனக்காரர் பெண்கள் அணியும் குதிகால் உயரக் காலணிகளை அணிந்து ஆடிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் எனக்கும் ஆர்வம் வந்து விட்டது. ஒரு ஜோடி காலணிகளை வாங்கி, அறைக்குள் நடந்து பழகினேன். மனதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரித்தது. பிறகு அலுவலகத்துக்கு அணிந்து சென்றேன். என்னை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தனர். குதிகால் உயரக் காலணிகளை ஆண்கள் அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தேன்.

அலுவலகக் கூட்டங்கள், விருந்து போன்ற நாட்களில் குதிகால் உயரக் காலணிகளைத்தான் அணிந்து செல்வேன். என் உயர் அதிகாரி, இந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். என் வேலையில் குறை இருந்தால் சொல்லுங்கள், நான் எதை அணிய வேண்டும், அணியக் கூடாது என்பதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டேன். குதிகால் உயரக் காலணிகளை நான் மட்டுமா பயன்படுத்தி வருகிறேன்? அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், செல்வந்தர்கள், நடனக்காரர்கள், நடிகர்கள் என்று பலரும் குதிகால் உயரக் காலணிகளை அணிந்திருப்பதை நீங்கள் கவனித்ததில்லையா? அவரவர் வசதிப்படி, அவரவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எடை அதிகமான ஆண்கள் அணியும் காலணிகளைப் பெண்களும் அணியலாம். பெண்கள் அணியும் காலணிகளை ஆண்களும் அணியலாம். குதிகால் உயரக் காலணி அணிவதால் நான் ஆண் இல்லை என்று சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை” என்கிறார் ஆஷ்லே மாக்ஸ்வெல்.

உங்கள் விருப்பம், உங்கள் உரிமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x