Last Updated : 26 Sep, 2014 10:40 AM

 

Published : 26 Sep 2014 10:40 AM
Last Updated : 26 Sep 2014 10:40 AM

ஐ.எஸ்.ஸுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்றுமுன்தினம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிபர் ஒபாமா தலைமை வகித்து பேசியதாவது:

மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். அமைப்பு மனித குலத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத் துள்ளது. அந்த அமைப்பில் வெளி நாடுகளைச் சேர்ந்த பலர் இணைந் துள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடக்கூடும்.அமெரிக்க உளவுத் துறையின் தகவலின்படி சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த 15,000 வெளிநாட்டினர் ஐ.எஸ். அமைப்பில் உள்ளனர். குறிப்பாக அல்-காய்தா ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த பலர் அந்த அமைப்பில் இணைந்து வருகின்றனர்.

தீவிரவாதம் எனும் புற்றுநோய் வேகமாக பரவி மத்திய கிழக்கு நாடுகளை சூறையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டியது சர்வதேச சமுதாயத்தின் கடமை. ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போர் தொடங்கிவிட்டது. அந்த அமைப்பை தனி ஆளாக எதிர் கொள்ள முடியாது. உலக நாடுகள் அனைத்தும் ஐ.எஸ்ஸுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.

உக்ரைன் விவகாரம்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. அந்த நாடு அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்து நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விலையை ரஷ்யா கொடுக்க நேரிடும். ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. இந்த சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண உலக நாடுகள் உதவ வேண்டும் என்று ஒபாமா பேசினார்.

இதைத் தொடர்ந்து, தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x